தீயாய் பரவிய வீடியோ.. ஆத்தூர் ஆதி திராவிடர் துறை ஆர்.ஐ. கனிமொழி சஸ்பெண்ட்
சேலம்: சேலம் ஆத்தூரில் பெண் அதிகாரி, லஞ்சம் வாங்குவதாக பரவிய வீடியோவின் அடிப்படையில், அவர் சஸ்பெண்ட் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பதிவுத்துறை, வருவாய்த்துறையில், மிகப்பெரிய அதிர்வலையையும் இந்த சம்பவம் ஏற்படுத்தி வருகிறது.
பதிவுத்துறையில், பட்டா, பத்திரப்பதிவு போன்ற விஷயங்களில் லஞ்ச நடமாட்டம் பெருகியபடியே உள்ளது.. இந்த முறைகேடுகளை தடுப்பதற்காகவே, பல்வேறு அதிரடிகளையும், கடிவாளங்களையும் தமிழக பதிவுத்துறை முன்னெடுத்து வருகிறது. எனினம், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் எண்ணிக்கை பெருகியபடியே உள்ளது.

பெண் அதிகாரிகள்: அதிலும் பெண் அதிகாரிகளே, லஞ்சம் வாங்கி, ஆங்காங்கே கைதாகி வருவது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை தந்து வருகிறது.. லஞ்சம், ஊழல் தொடர்பாக அரசு ஊழியர்கள், அதிகாரிகளும் ஊழல் தடுப்பு போலீசாரால் தொடர்ந்து சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வந்தாலும்கூட, பெண் அதிகாரிகளின் லஞ்ச லாவண்யம் அதிகரித்து கொண்டேயிருக்கிறது.
இதோ இப்போதும் ஒரு அதிகாரி அசிங்கப்பட்டுள்ளார்.. சேலம் மாவட்டம், ஆத்துார் தாலுகா அலுவலக வளாகத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் அலுவலகம் செயல்படுகிறது.. இங்கு, ஆர்.ஐ.,யாக பணிபுரிபவர் கனிமொழி.. இவரிடம் தடையில்லா சான்றிதழ் கேட்டு, நபர் ஒருவர் அணுகியிருக்கிறார்.. அப்போது, அவரிடம் கனிமொழி லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
கனிமொழி: ஆனால், லஞ்சம் தர விரும்பாத அந்த நபர், கனிமொழி லஞ்சம் கேட்கும் வீடியோவை அவருக்கே தெரியாமல், தன்னுடைய செல்போனில் வீடியோவாக எடுத்துவிட்டார்.. இதுதான் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவியது..
அந்த வீடியோவில், "என்ஓசிக்கு ஒரு அமௌண்ட் கேட்பாங்க.. தாசில்தாருக்கு ஒரு தொகை தர வேண்டும். அப்படியே எங்க ஆபீஸையும் கவனிக்கணும்.. மற்றவர்களுக்கும் தரவேண்டும்.. இத்தனை வேலை இருக்கு.. ஒவ்வொரு பில்லுக்கும் கேட்பாங்க.. என்று யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம் தர வேண்டும் என்பதை சர்வசாதாரணமாக லிஸ்ட் போட்டு சொல்கிறார்.
வீடியோ பரபரப்பு: இந்த வீடியோவை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், இந்த வீடியோ தொடர்பாக, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, மாவட்ட வருவாய் அலுவலருக்கு உத்தரவிட்டார்.. இறுதியில், ஆர்.ஐ., கனிமொழியை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
கடந்த 2 நாட்களாகவே இந்த வீடியோ பரவி கொண்டிருக்கிறது.. இதுகுறித்து பிரபல செய்தி சேனல், கனிமொழியிடம் கேட்டதற்கு, "இது எடிட் செய்து பரப்பப்பட்ட வீடியோ.. நான் யாரிடமும் லஞ்சம் கேட்கவில்லை.. வீடியோவை வெளியிட்டவர் மீது தாசில்தாரிடம் புகார் தந்துள்ளேன்" என்று இந்த வீடியோவுக்கு மறுப்பு தெரிவித்திருந்தாராம் கனிமொழி.
அதிரடி நடவடிக்கை: அதேபோல, ஆத்தூர் தாசில்தார் ஜெயலட்சுமியிடம் இதுகுறித்து கேட்டதற்கு, "வீடியோத்தன்மை குறித்து விசாரணை நடக்கிறது" என்று கூறியிருந்தாராம்..
இந்நிலையில்தான், கனிமொழியை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை தெரியவில்லை.. கனிமொழி நிஜமாகவே லஞ்சம் வாங்கினாரா? அல்லது கனிமொழி சொல்வதுபோல் இது எடிட்செய்து பரப்பப்பட்ட வீடியோவா? என்று தெரியவில்லை.. எனவே போலீசார்தான் இதுகுறித்த உண்மைத்தன்மையை வெளிக்கொணர வேண்டும்.












Click it and Unblock the Notifications