சேலம் தனியார் லாட்ஜில் திருப்பூர் உமா.. பணமே இல்லையென சென்ற கணவர்.. கடைசியில் இப்படி பண்ணிடாரே
சேலம்: திருப்பூர் காந்திநகர் பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவர் கட்டிட காண்டிராக்டர். இவருடைய மனைவி உமா மகேஸ்வரிக்கு உடல் நிலை பாதிப்பு இருந்தது. அதற்கு பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் யுவராஜ் தனது மனைவியுடன் சேலம் வந்துள்ளார். பழைய பஸ்நிலையம் அருகில் தனியார் தங்கும் விடுதியில் தங்கி சிகிச்சைக்காக சென்று வந்துள்னர். விடுதியில் அவரது மனைவி காலமான நிலையில், அவரது கணவர் திடீரென மாயமாகி உள்ளார்.
திருப்பூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் என்பவர் கட்டிட காண்டிராக்டர் ஆவார். இவருடைய மனைவி உமாமகேஸ்வரிக்கு 46 வயது ஆகிறது. உமா மகேஷ்வரிக்கு உடல் நலன் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதற்காக உமா பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் அவரது உடல் நிலை குணமடையவில்லை.

மருத்துவமனையில் அனுமதி
இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு யுவராஜ் மற்றும் அவரது மனைவி உமா மகேஸ்வரி ஆகிய இருவரும் சேலத்திற்கு வந்தனர். பின்னர் அந்த தம்பதி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி தினமும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்குசென்று வந்தார்களாம்.
பணம் இல்லை
இதையடுத்து யுவராஜ் விடுதியின் வரவேற்பு அறையில் இருந்த அழகரசன் என்பவரிடம் தனது மனைவியின் உடலை ஊருக்கு கொண்டு செல்ல பணம் வசதி இல்லை என்றும் இதனால் வெளியில் சென்று தெரிந்த நபரை சந்தித்து பணம் வாங்கிக்கொண்டு அவரையும் அழைத்து வருகிறேன் என்று யுவராஜ் கூறிவிட்டு சென்றுள்ளார்.
திரும்ப வரவே இல்லை
மதியம் 1 மணிக்கு சென்றவர் பிற்பகல் 3 மணி ஆகியும் யுவராஜ் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி நிர்வாகம் உடனே சேலம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு நடந்தசம்பங்களை கூறி தகவல் கூறியது. இதையடுத்து போலீசார் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள விடுதிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் உமாமகேஸ்வரி தங்கியிருந்த அறைக்கு சென்று அங்கு இறந்து கிடந்த அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
யுவராஜ் செல்போன் ஸ்விட்ச் ஆப்
இதையடுத்து வெளியில் சென்ற யுவராஜின் செல்போன் எண்ணிற்கு போலீசார் தொடர்பு கொண்டபோது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது. பின்னர் அந்த விடுதியில் கொடுத்திருந்த முகவரியை வைத்து போலீசார் விசாரித்தபோது, அவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை காலி செய்துவிட்டு சென்றதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்திருக்கிறார்கள்.
என்ன நடந்தது
இதனால் உமாமகேஸ்வரி எப்படி இறந்தார்? என்ற விவரம் ஏதும் உடனடியாக வெளியாகவில்லை இதனால் அவரது சாவில் மர்மம் நீடிக்கிறது. யுவராஜ் வந்தால் தான் அவரது மனைவி இறப்புக்கான காரணம் தெரியவரும் என போலீசார் கூறினார்கள். மனைவி இறந்த நிலையில் வெளியே சென்ற யுவராஜ் எங்கு சென்றார்? அவர் என்ன ஆனார்? என்பது குறித்து டவுன் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications