அய்யோ கண் மஞ்ச மஞ்சளா இருக்கே! சேலத்தில் பச்சிளம் குழந்தையை கடத்திய பெண் கைது! விசாரணையில் பகீர்
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தையை கடத்திச் சென்ற பொறியியல் பட்டதாரி பெண்ணை போலீஸார் கைது செய்தனர். குழந்தை கடத்தப்பட்ட 15 மணி நேரத்தில் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. காரியாப்பட்டியில் இருந்த குழந்தையை அதிகாலை 2.30 மணிக்கு போலீஸார் மீட்டுக் கொண்டு வந்தனர்.
தமிழகத்தில் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சைகள் அளிக்கப்படுவதால் ஏழை, எளியவர்கள் சிகிச்சைக்காக வருகிறார்கள். இந்த அரசு மருத்துவமனைகளில் சிக்கலான அறுவை சிகிச்சைகளை கூட மருத்துவர்கள் செய்வதால் வெளிமாநிலங்களில் இருந்து கூட நோயாளிகள் வருகிறார்கள்.

சிசேரியன் உள்ளிட்ட அறுவை சிகிச்சைகளும் சிறப்பாக செய்யப்படுகின்றன. இது போன்ற ஏழைகளை குறி வைத்து சிலர் ஏமாற்றுகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் குழந்தை கடத்தல், ஏமாற்றி பணம், நகை பறித்தல் உள்ளிட்ட சம்பவங்கள் நடக்கின்றன.
இது போல் கடத்தப்படும் குழந்தைகளை லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்கும் சம்பவங்களும் நடக்கின்றன. அந்த வகையில் சேலம் அரசு மருத்துவமனையில் ஒரு பெண்ணிடம் இன்னொருவர் பேச்சு கொடுத்து குழந்தையை கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு அருகே பள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கதுரை. இவரது மனைவி வெண்ணிலா. நிறைமாத கர்ப்பிணியான வெண்ணிலா, சேலம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அன்றைய தினமே அவருக்கு சிசேரியன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது.
வெண்ணிலாவையும் அவருடைய பச்சிளம் குழந்தையையும் பார்த்துக் கொள்ள அவருடைய அம்மா இந்திரா மருத்துவமனையில் இருந்தார். அப்போது இந்திராவிடம் செவிலியர் என அறிமுகமாகி ஒரு பெண் பழகியுள்ளார். அவ்வப்போது வந்து அந்த குழந்தையை பார்த்துவிட்டு சென்றுள்ளார்.
அப்போது திடீரென "குழந்தையின் கண்கள் மஞ்சளாக இருக்கிறது. உடனே டாக்டரிடம் காட்ட வேண்டும். ஒரு வேளை மஞ்சள் காமாலையாக இருக்கலாம்" என்றாராம். இதனால் பதறிய இந்திரா, குழந்தையை தூக்கிக் கொண்டு அந்த பெண்ணுடன் மருத்துவர் அறை அருகே சென்றார்.
அப்போது இந்திராவிடம், மருந்து கடையில் போய் மருந்து வாங்கி வா என கூறி அவரை அனுப்பிய அந்த பெண் குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றுவிட்டார். இதையடுத்து மருந்தை வாங்கிக் கொண்டு இந்திரா வந்து பார்த்த போது அந்த பெண் இல்லாததை அடுத்து அதிர்ச்சி அடைந்தார்.
எங்கெங்கோ தேடியும் கிடைக்கவில்லை. அந்த பெண்ணின் அடையாளங்களை சொல்லி செவிலியர்களிடம் கேட்ட போது அப்படி யாரும் இங்கு செவிலியராக பணியாற்றவில்லை என கூறிவிட்டனர். அப்போதுதான் குழந்தை கடத்தப்பட்டதை இந்திரா உணர்ந்தார். உடனடியாக போலீஸுக்கு புகார் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இந்திராவிடம் விசாரணை நடத்தி விட்டு, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது முகக் கவசம் அணிந்த பெண் ஒருவர் குழந்தையை கடத்திச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து அவரது புகைப்படத்தை வெளியிட்ட போலீஸார், அந்த பெண்ணை தேடி வந்தனர்.
இந்த நிலையில் அந்த பெண் காரியாப்பட்டியை சேர்ந்த வினோதினி என்பதும் அவர் பொறியியல் பட்டதாரி என்றும் தெரியவந்தது. இதையடுத்து காரியாப்பட்டிக்குச் சென்ற போலீஸார் அங்கிருந்த வினோதினியை கைது செய்து குழந்தையை மீட்டனர். இதையடுத்து குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.
குழந்தையை பார்த்ததும் வெண்ணிலா கண்ணீர் விட்டு அழுது குழந்தையை வாரி அணைத்துக் கொண்டார். இந்த நிலையில் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய போது தனக்கு திருமணமாகி 4 மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும் அந்த குழந்தை கலைந்துவிட்டதால் குழந்தை மீது இருந்த ஆசையால் கடத்திவிட்டதாக வாக்குமூலம் அளித்தார். ஆயினும் போலீஸார் இது போல் அவர் வேறு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் மீது குழந்தை கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications