கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு இளைஞர் தற்கொலை முயற்சி! சேலம் பஸ்டாண்ட்டில் ஷாக்! பரபர தகவல்
சேலம்: சேலம் பழைய பேருந்து நிலையத்தில் பஸ்சுக்காக நின்ற கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் படுகாயமடைந்த கல்லூரி மாணவிக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இன்ஸ்டாகிராம் மூலமாக இருவரும் பழகி வந்த நிலையில் இன்று அவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டதில் இளைஞர் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தியுள்ளார்.
சேலம் பழைய பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் மூலமாக ஒருவரை ஒருவர் பார்க்காமல் காதலித்து வந்த நிலையில், தன்னுடன் ஒரு வயது குறைவு என்பதால் இளைஞரின் காதலை கல்லூரி மாணவி ஏற்காமல் மறுத்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த இளைஞர் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு தனது கையையும் கத்தியால் அறுத்துக்கொண்டார். இதையடுத்து படுகாயமடைந்த கல்லூரி மாணவிக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சேலம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்த விவரம் வருமாறு:-

கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து
சேலம் பழைய பேருந்து நிலையத்தில் கல்லூரிக்கு செல்வதற்காக இளம்பெண் ஒருவர் காத்துக்கொண்டிருந்தார். அப்போது அவரது அருகே இளைஞர் ஒருவர் வந்து நின்றார். அந்த கல்லூரி மாணவியிடம் இளைஞர் பேச்சுக்கொடுத்தார். தொடர்ந்து கல்லூரி மாணவியும், இளைஞரும் நீண்ட நேரமாக பேசிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென இருவருக்கும் இடையேயான பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறியது.
அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த இளைஞர், பொது இடம் என்றும் பார்க்காமல் கல்லூரி மாணவியில் வயிற்றில் குத்தினார். இதனால் வலி தாங்க முடியாமல் அந்த மாணவி ரத்தம் வழிந்தோட கத்தி அழுது சரிந்து விழுந்தார். இதைப் பார்த்து அங்கிருந்த பயணிகள் அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து போய் நின்றனர். பின்னர் அந்த இளைஞரை பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது அந்த இளைஞர் அவரது கை மற்றும் கழுத்து பகுதியில் தன்னைத்தானே அறுத்துக்கொண்டார்.
இன்ஸ்டாகிராம் மூலம் காதல்
இதனால் சேலம் பழைய பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த மற்ற பயணிகள் கல்லூரி மாணவி மற்றும் இளைஞரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
இதில் பேருந்து நிலையத்தில் நின்ற கல்லூரி மாணவியை கத்தியால் குத்தியது சேலம் மாவட்டத்தை சேர்ந்த மோகனபிரியன் என்று தெரியவந்துள்ளது. மேலும் காதல் விவகாரத்தில் தான் இவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது என்றும், குறிப்பாக கல்லூரி மாணவி தன்னுடன் ஒரு வயது சிறியவரான உன்னை திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறியதாலேயே இளைஞர் கத்தியால் குத்திய அதிர்ச்சிகர தகவல் தெரியவந்தது.
தன்னுடன் ஒரு வயது சிறியவர்
அதாவது கத்தியால் குத்திய இளைஞர் மோகனபிரியனுக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக கல்லூரி மாணவியின் அறிமுகம் கிடைத்துள்ளது. தொடர்ந்து இருவரும் மாறி மாறி இன்ஸ்டாகிராமில் குறுஞ்செய்தி அனுப்பி பேசிவந்தனர். நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புவதாக கூறி காதலித்துள்ளனர். நாட்கள் செல்ல செல்ல நேரில் பார்க்க வேண்டும் என்று இருவரும் கூறியிருக்கிறார்கள்.
இதற்கிடையே கல்லூரி மாணவிக்கு மோகனபிரியன் ஐடிஐ மட்டும் தான் படித்திருக்கிறார் என்ற விஷயம் தெரியவந்திருக்கிறது. மேலும் டேட் ஆப் பர்தை கேட்ட போது, தன்னுடன் மோகனபிரியன் ஒரு வயது சிறியவர் என்பதும் தெரியவந்திருக்கிறது. இதனால் கல்லூரி மாணவி காதலை கைவிட நினைத்துள்ளார். மேலும் வீட்டில் ஏற்கனவே மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருந்ததால் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையையே திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார் கல்லூரி மாணவி.

உன்னை காதலிக்க முடியாது
இந்த நிலையில் தான் இன்று சேலம் பழைய பேருந்து நிலையத்தில் நின்ற கல்லூரி மாணவியுடன் மோகனபிரியன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது கல்லூரி மாணவி விடாப்பிடியாக உன்னை காதலிக்க முடியாது என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு, தானும் தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தெரியவந்துள்ளது.
பட்டப்பகலில் சேலம் பழைய பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக சேலம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications