உலக போர் கூட ஏற்படும்.. கவனமா இருக்கணும்! அமெரிக்க வரி குறித்து சிங்கப்பூர் பிரதமர் கொடுத்த வார்னிங்
சிங்கப்பூர்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகள் மீது ரெசிப்ரோக்கல் வரியைக் கடந்த வாரம் அறிவித்தார். இது சர்வதேச அளவில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த வரி என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.. இது வரும் காலத்தில் உலகை எப்படிப் பாதிக்கும்.. இதனால் எந்தளவுக்கு அபாயங்கள் இருக்கிறது என்பதைச் சிங்கப்பூர் நாட்டின் பிரதமர் லாரன்ஸ் வோங் விளக்கியுள்ளார்.
கடந்த வாரம் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்தார். அதாவது உலக நாடுகள் ஒரு நாட்டின் மீது எவ்வளவு வரி அறிவிக்கிறதோ.. அதே அளவுக்கு அமெரிக்காவும் வரி விதிக்கும் என்பதே இதன் அடிப்படை. உலகின் பெரும்பாலான நாடுகள் மீது டிரம்ப் இந்த ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்திருந்தார்.

உலக நாடுகள் மீது வரிகள்
அதிகபட்சமாக கம்போடியா மீது 49% இறக்குமதி வரி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வியட்நாம் மீது 46 சதவிகிதமும் இலங்கை மீது 44 சதவிகிதமும் வரி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மீது 26%, சீனா மீது 34% வரி வரி அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் மீது 10% வரி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல அனைத்து நாடுகள் மீதும் வரி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது சர்வதேச வர்த்தகத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதன் காரணமாகவே உலகளவில் இன்று காலை முதல் பங்குச்சந்தைகள் கடுமையாகச் சரிந்தன. ஜப்பான், கொரியா என ஆசிய நாடுகளின் பங்குச்சந்தைகள் மிக மோசமாகச் சரிந்தன. இந்தியப் பங்குச்சந்தைகளும் சமீப காலங்களில் இல்லாத அளவுக்குச் சரிவைச் சந்தித்தன. ஆசிய மட்டுமின்றி அமெரிக்கப் பங்குச்சந்தைகளும் கூட இதில் இருந்து தப்புவதாக இல்லை.
சிங்கப்பூர் பிரதமர்
அதேநேரம் டிரம்ப் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். வரிகளை வாபஸ் பெறும் திட்டம் எதுவும் அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. சொல்லப்போனால் தனது மருந்து இப்போது தான் வேலை செய்யத் தொடங்கியிருப்பதாகச் சொல்லி அவர் பகீர் கிளப்பியுள்ளார். இதற்கிடையே டிரம்பின் இந்த ரெசிப்ரோக்கல் வரி உலகளவில் எந்தளவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதைச் சிங்கப்பூர் நாட்டின் பிரதமர் லாரன்ஸ் வோங் விளக்கியுள்ளார்.
இது தொடர்பாகச் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் வெளியிட்டுள்ள வீடியோவில், "உலகம் இப்போது மாறிக் கொண்டு இருக்கிறது. இது சிங்கப்பூர் போன்ற சிறிய ஓபன் பொருளாதாரங்களுக்குப் பாதகமாக இருக்கும் என்பதை நான் முன்பே கூறியிருந்தேன். இருப்பினும், சிலர் நான் கூறியதைக் கேள்வி எழுப்பி இருந்தனர். ஆனால், டிரம்ப் சமீபத்தில் விடுதலை நாள் எனச் சொல்லிக் கொண்டு அறிவித்த வரிகள் நான் சொன்னது உண்மை என்பதைச் சந்தேகத்திற்கு இடமில்லாமல் காட்டிவிட்டது.

உலகமயமாக்கல் முடிந்துவிட்டது
உலகம் மாறி வருவதை இது குறிக்கிறது. உலகமயமாக்கல் மற்றும் சுதந்திர வர்த்தகத்தின் காலம் முடிந்துவிட்டது. நாம் ஒரு புதிய கட்டத்தில் நுழைகிறோம். இது மிகவும் தன்னிச்சையானது மற்றும் ஆபத்தானது. சுதந்திர சந்தை சார்ந்த பொருளாதாரங்களுக்குப் பல ஆண்டுகளாக அமெரிக்காதான் அடித்தளமாக இருந்தது. அமெரிக்கா இத்தனை காலம் சுதந்திர வர்த்தகத்தை ஆதரித்தது. மேலும், பலதரப்பு வர்த்தக அமைப்பை உருவாக்கும் முயற்சிகளுக்கு வழிவகுத்தது. அங்குச் சரியாக வர்த்தகம் செய்தால் அனைவருக்கும் நன்மை என்ற சூழலே இருந்தது.
உலக வர்த்தக அமைப்பு
சர்வதேச வர்த்தகத்திற்குக் கடந்த காலங்களில் இல்லாத ஸ்திரத்தன்மையை உலக வர்த்தக அமைப்பு தான் கொண்டு வந்தது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இதிலும் சில குறைபாடுகள் இருந்தன. இதன் காரணமாகவே வர்த்தக அமைப்பின் விதிகளை அப்டேட் செய்யவும், அமைப்பை மேம்படுத்தவும் சிங்கப்பூர் உட்பட பல நாடுகள் நீண்ட காலமாக அழைப்பு விடுத்துள்ளன.
ஆனால் அமெரிக்கா இப்போது செய்வது சீர்திருத்தம் இல்லை. அவர்கள் ஒட்டுமொத்த அமைப்பையும் கைவிடுகிறார்கள். தன்னிச்சையாக ஒவ்வொரு நாட்டின் மீதும் ரெசிப்ரோக்கல் வரியை அறிவிப்பது என்பது உலக வர்த்தக அமைப்பின் கட்டமைப்பை முழுமையாக நிராகரிப்பதாகும்.

பாதிப்பு அதிகம்
சிங்கப்பூருக்கு அமெரிக்கா 10% என்று குறைந்த வரியைத் தான் விதித்துள்ளது. இதனால் தற்போது வரியால் ஏற்படும் தாக்கம் குறைவாக இருக்கலாம். ஆனால் நீண்ட கால நோக்கில் ஆழமான விளைவுகள் ஏற்படலாம். மற்ற நாடுகளும் அமெரிக்காவைப் போலவே உலக வர்த்தக அமைப்பைக் கைவிட்டு, இஷ்டம் போல வரிகளை அறிவித்து வர்த்தகம் செய்தால்.. அது அனைத்து நாடுகளுக்கும், குறிப்பாகச் சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளுக்கும் சிக்கலை ஏற்படுத்தும். நாம் ஓரங்கட்டப்படும் அபாயம் உள்ளது.
அமெரிக்காவின் வரிகளுக்குச் சர்வதேச நாடுகள் எதிர்வினை ஆற்றலாம். சிங்கப்பூர் இதற்குப் பதிலடியாக வரிகளை அறிவிக்க வேண்டாம் என முடிவு செய்திருக்கிறோம். ஆனால் மற்ற நாடுகள் பதிலடி வரிகளை விதிக்கலாம். உலகளாவிய வர்த்தகப் போரின் வாய்ப்பு அதிகரித்து வருகிறது. அதிக வரி, சர்வதேச நாடுகள் அடுத்து என்ன செய்யும் என்பதில் நிச்சயமற்ற தன்மை ஆகியவை உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீடுகள் பாதிக்கப்படும்.. சர்வதேச வளர்ச்சி மெதுவாக இருக்கும்.
உலக போர் ஆபத்து
வர்த்தகத்தை அதிகமாக நம்பியிருப்பதால், சிங்கப்பூர் இதனால் பெரிய பாதிப்பை எதிர்கொள்ளும். கடைசியாக 1930களில் இதுபோல நடந்தது. அப்போது வர்த்தகப் போர்கள் மெல்ல ஆயுத மோதலாக மாறி இறுதியில் இரண்டாம் உலகப் போராகவும் மாறியது. இப்போதுள்ள நிலைமை வரும் காலத்தில் எப்படி இருக்கும் என்பதை யாராலும் சொல்ல முடியாது.. ஆனால் தற்போது உருவாகி வரும் ஆபத்துகள் குறித்து நாம் தெளிவாக இருக்க வேண்டும்.
இப்போது சர்வதேச அமைப்புகள் பலவீனமடைந்து வருகின்றன. சர்வதேச விதிமுறைகள் அழிந்து வருகின்றன. பல நாடுகள் குறுகிய சுயநலத்தின் அடிப்படையில் செயல்படுகின்றன. தங்கள் நலனுக்காக இவர்கள் பிற நாடுகள் மீது அழுத்தம் தரவும் தயாராக உள்ளன. இதுவே இன்றைய நமது உலகின் யதார்த்தம். நாங்கள் விழிப்புடன் இருப்போம். மேலும் ஒரே எண்ணம் கொண்ட நாடுகளுடன் நெட்வொர்க்கை ஏற்படுத்துவோம். சிங்கப்பூர் எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ள மற்ற நாடுகளை விடத் தயாராக இருக்கிறோம்.

பாதுகாப்பு இருக்காது
இருப்பினும், வரவிருக்கும் பல அதிர்ச்சிகளுக்கு நாம் நம்மை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் இருந்த சர்வதேச அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை உடனே திரும்பாது. சிறிய நாடுகளைப் பாதுகாத்த சர்வதேச விதிகள் இரு இருக்கும் என்று சொல்ல முடியாது.. நாம் அனைவரும் மனதளவில் தயாராக இருக்க வேண்டும். மெத்தனமாக இருக்கக் கூடாது. பல ரிஸ்க்கள் உள்ளன. அடுத்து வரும் பாதை கடினமாக இருக்கும். ஆனால் நாம் உறுதியாகவும் ஒற்றுமையாகவும் இருந்தால் இந்த சிக்கலான உலகையும் வெல்ல முடியும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications