சிசிடிவியை துண்டித்து வங்கிக்குள் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததால் தப்பிய மர்ம நபர்கள்.. பரபர!
சிவகங்கை: சிவகங்கை அருகே கீழக்கண்டனையில் உள்ள கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி அரங்கேறியுள்ளது. சிசிடிவி கேமராக்களை துண்டித்து, கதவை உடைத்த போது எச்சரிக்கை மணி ஒலித்ததால் கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் கீழக்கண்டனையில் தொடக்க மேலாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் வரவு, செலவு வைத்து வருகின்றனர். மானிய விலையில் உரம் மற்றும் தங்க நகை மூலம் பணம் பெறுவது போன்றவற்றிற்கு அப்பகுதி விவசாயிகள் பெருமளவில் இந்த வங்கியை பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு கீழக்கண்டனை கூட்டுறவு வங்கிக்குள் சிசிடிவி இணைப்பை துண்டித்து மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். கொள்ளையடிக்க கதவை உடைத்தபோது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் உடனே அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
எச்சரிக்கை தகவல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சென்றதை அடுத்து கூட்டுறவுச் செயலாளர் விரைந்து வந்து பார்த்தபோது கொள்ளை முயற்சி நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக சிவகங்கை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மர்ம நபர்கள், எச்சரிக்கை அலாரம் அடித்ததன் காரணமாக கொள்ளை முயற்சியை கைவிட்டதால் கீழக்கண்டனை கூட்டுறவு வங்கியில் இருந்த 4 கிலோ தங்க நகைகள் தப்பின. கூட்டுறவு வங்கியில் நடந்த கொள்ளை முயற்சி தொடர்பாக தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் தப்பிச்சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இதேபோல சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அண்ணா சிலை அருகே இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை ஊழியர்கள் வழக்கம்போல் பணி முடிந்து வங்கியை பூட்டி விட்டுச் சென்றனர். 2 நாட்கள் விடுமுறை முடிந்து இன்று காலை வங்கி அலுவலர்கள் வங்கிக்கு வந்தனர். அப்போது வங்கியின் கதவு, ஜன்னல்கள் உடைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து மானாமதுரை போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். அப்போது வங்கியின் கிரில் கேட் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதும், மேலும் வங்கியின் பக்கவாட்டில் உள்ள ஜன்னல் கதவு உடைந்திருந்தது.
நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் வங்கியின் கதவை உடைத்து உள்ளனர். ஆனால் ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் கொள்ளை முயற்சியை பாதியிலேயே கைவிட்டு சென்றதாகத் தெரிகிறது. தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை சேகரித்தனர். இந்த கொள்ளை முயற்சி தொடர்பாக மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications