சீனை மாற்றும் சீமான்.. திடீரென விஜய்க்கு ஆதரவு! மோடி பொங்கல்னா.. ஓடிப் போங்கல்! ரைமிங்காக பதிலடி!
சிவகங்கை: ஆட்சியில் பங்கு என்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் அறிவிப்பு என்பது தவறு இல்லை, இது பெருந்தன்மையை காட்டுகிறது எனவும், திருமாவளவனை பொதுத் தொகுதியில் நிறுத்தி திமுக வெற்றி பெற வைக்குமா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கட்சி நிர்வாகிகள் கலந்தாலோசனை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களையும் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்," தேர்தலில் வாக்குகளை அறுவடை செய்யவே அரசு ஊழியர்கள் ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு. இது ஏற்கனவே உள்ள கடன் சுமையை மேலும் அதிகரிக்கும். அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியது மகிழ்ச்சி.
சீமான் பேச்சு
ஜாக்டோ ஜியோ வலுவான அமைப்பாக உள்ளது. பல லட்சம் வாக்குகள் இருப்பதால் அவர்களது கோரிக்கையை அரசு ஏற்றுள்ளது. சம ஊதியம் கேட்டு போராடும் ஆசிரியர்கள், துப்புரவு தொழிலாளர்களுக்கு வலுவான அமைப்பு இல்லாததால் அவர்களுடைய கோரிக்கையை அரசு ஏற்காது.ரூ.10லட்சம் கோடி கடன் பெற்றும், மாநிலத்தில் எந்தவித திட்டமும் சிறப்பாக நிறைவேறவில்லை. பெண்கள் மாதம் ரூ.1000 கேட்டு வீதியில் போராடவில்லை. இது ஓட்டுக்களை பறிக்கும் நுட்பமாக தான் பார்க்கிறேன்.
தமிழக அரசியல்
மோடி பொங்கல் என்று கூறினால் ஓடிப் போங்கள் என்று கூற வேண்டியது தான். எந்த பெருமையும் தமிழர்களுக்கு இருக்கக் கூடாது என நினைப்பது பாஜக அரசு. கருத்துக்கணிப்பு மீது எங்களுக்கு உடன்பாடு இல்லை. இது கருத்து திணிப்பு. நாங்கள் வாங்கும் வாக்கு மட்டுமே உண்மையான வாக்கு. மற்ற கட்சி நிர்வாகம் வாக்கில் அனைத்தும் பணம் கொடுத்து வாங்கும் வாக்கு. ஊழல், லஞ்சம், தீண்டாமை, பெண் அடிமைத்தனம் இல்லாத ஒரு புதிய நாட்டை உருவாக்க வேண்டும் என்பது நாம் தமிழர் கட்சி இலக்கு.
விஜய் ஆட்சி பங்கு
மத்திய ஆட்சி அதிகாரத்தில பங்கு உள்ள போது, விஜய் ஆட்சியில் பங்கு அறிவிப்பு என்பது தவறு இல்லை. இது விஜயின் பெருந்தன்மையை காட்டுகிறது. இது வரவேற்கத்தக்கது. பிப்ரவரி 21 நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் பெயர்களும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளும் அறிவிக்கப்படும். நாம் தமிழர் கட்சி பிற கட்சிகளுடன் கூட்டணி என்பது எப்போதும் கிடையாது. தனித்து தான் போட்டி. தமிழக அரசியலில் நாம் தமிழர் கட்சி வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தி வருகிறது.
திருமாவளவன் பொதுத்தொகுதி
வெற்றி பெற காலம் எடுக்கும், ஆனால், மக்கள் நினைத்தால் நிச்சியம் மாற்றம் வரும்.
2026 தேர்தல் எங்களுக்கு எந்த சவாலும் இல்லை. அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாழ்த்தப்பட்டவர்களை பதவியில் அமரவைத்து அழகு பார்த்தார். அதை திமுக அரசு செய்யுமா? பொதுத் தொகுதியில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவரை நிறுத்தி திமுக வென்று காட்டுமா? திருமாவளவனை பொதுத் தொகுதியில் நிறுத்தி திமுக வெற்றி பெற வைக்குமா? மருத்துவமனையில் குடிக்கிறார்கள் என்று செய்திகள் வருகிறது. அரசு மதுபானம் விற்கும் போது, மருத்துவமனையில் குடிக்கத் தான் செய்வார்கள். இதில் என்ன நடவடிக்கை எடுப்பது" எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications