கச்சநத்தம் 3 பேர் படுகொலை வழக்கு- 27 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் 2018-ல் 3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 27 பேர் குற்றவாளிகள் என்று சிவகங்கை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ளது கச்சநத்தம் கிராமம். 2018-ம் ஆண்டு மே மாதம் கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், சண்முகநாதன் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். கச்சநத்தம் படுகொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் தமிழகத்தையே உலுக்கியும் எடுத்தது.

கச்சநத்தம் படுகொலை தொடர்பாக விசாரித்த போலீசார் ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த மொத்தம் 27 பேரை கைது செய்தனர். இவர்களில் அருண்குமார், சந்திரகுமார், அக்னிராஜ் உள்ளிட்டோர் அடங்குவர்.
கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் அண்மையில் நிறைவடைந்தன. இதனையடுத்து கடந்த ஜூலை 27-ல் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இதனால் திருப்பாச்சேத்தி பகுதியில் பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இவ்வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 1-ந் தேதி வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது.
இவ்வழக்கை விசாரித்த சிவகங்கை மாவட்ட எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம், ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த குற்றம்சாட்டப்பட்ட 27 பேரும் குற்றவாளிகள் என அதிரடியான தீர்ப்பளித்தது. மேலும் குற்றம்சாட்டப்பட்ட 27 பேருக்கான தண்டனை விவரங்கள் நாளை மறுநாள் அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார். இதனால் திருப்பாச்சேத்தி சுற்று வட்டாரப் பகுதியில் பரபரப்பும் பதற்றமும் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications