4 ஆல்ரவுண்டர்கள்.. டெஸ்ட் போட்டியில் யாராவது சோதனை செய்வார்களா.. கம்பீர் மீதே அத்தனை தவறும் இருக்கு!
கவுகாத்தி: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்விக்கு அருகில் இருக்கிறது. தென்னாப்பிரிக்கா அணியின் முன்னிலையில் 530 ரன்களை கடந்து சென்றுவிட்ட நிலையில், இந்திய வீரர்கள் சோர்வடைய தொடங்கி இருக்கின்றனர். சொந்த மண்ணில் இந்திய அணியின் மோசமான ஆட்டத்திற்கு பின் என்ன காரணம் என்பதை பார்க்கலாம்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. ஏற்கனவே முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், தற்போது 2வது டெஸ்டிலும் தென்னாப்பிரிக்கா அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 489 ரன்களை குவித்த போது, இந்திய அணி வெறும் 201 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

இதன்பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி தற்போது வரை 531 ரன்கள் முன்னிலையுடன் ஆடி வருகிறது. 450 ரன்களுக்கு மேல் சென்றாலே, இந்திய அணியின் பாடு திண்டாட்டம் தான். ஆனால் தென்னாப்பிரிக்கா அணியோ 550 ரன்களை நெருங்கி வருகிறது. இதனால் இந்திய அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.
ஏற்கனவே சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. தற்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் சொந்த மண்ணில் இழப்பது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு பயிற்சியாளர் கவுதம் கம்பீரே காரணம் என்று ரசிகர்கள் திட்ட தொடங்கி இருக்கின்றனர்.
ஏனென்றால் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டை போல், டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கவுதம் கம்பீர் தொடர்ச்சியாக சோதனை முயற்சிகளை மேற்கொண்டு கொண்டே இருக்கிறார். அதாவது நம்பர் 3 பேட்ஸ்மேனாக வாஷிங்டன் சுந்தரை கொண்டு வந்தது ஏன்? ஒரே போட்டியுடன் மீண்டும் சாய் சுதர்சனை நம்பர் 3ல் விளையாட வைத்தது ஏன்?
ஹர்சித் ராணாவுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கொடுப்பது எதனால்? பார்டர் கவாஸ்கர் டிராபிக்கு பின் ஒரு போட்டியில் கூட சிறப்பாக ஆடாத நிதிஷ் குமார் ரெட்டியை பிளேயிங் லெவனில் வைப்பது ஏன்? அப்படியே பிளேயிங் லெவனில் இருந்தாலும் இன்னிங்ஸிக்கு 6 ஓவர்களுக்கு மேல் பலிங் செய்யாதது ஏன்? வாஷிங்டன் சுந்தரின் ஸ்பின்னரை பயன்படுத்த மறுப்பது ஏன்?
ஒரு அணியில் 4 ஆல்ரவுண்டர்கள் எதற்காக தேர்வு செய்யப்படுகிறார்கள் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதன் மூலமாக கம்பீருக்கு டெஸ்ட் போட்டிகள் குறித்து எந்தவித பெரிய அனுபவமும் இல்லை என்பது நிரூபணமாகிறது. இதனால் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தோல்விக்கு பின் கம்பீரை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைக்க தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications