இந்திய கிரிக்கெட்டின் இருண்ட காலம்.. அப்போ கிரேக் சேப்பல்.. இப்போ கம்பீர்.. இனிதான் சிக்கலே இருக்கு!
மும்பை: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகிய இருவரையும் ரசிகர்கள் கடுமையாக சாடி வருகின்றனர். அடுத்தடுத்து சொந்த மண்ணில் 2 டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தோல்வி அடைந்தது, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான தருணமாக அமைந்துள்ளது.
இந்திய கிரிக்கெட்டின் இருண்ட காலமாக கிரேக் சேப்பல் பயிற்சி அளித்த காலத்தை பலரும் குறிப்பிடுவார்கள். கிரேக் சேப்பல் இந்திய அணிக்குள் செய்த மாற்றங்கள் காரணமாக 2007 உலகக்கோப்பை தொடரில் முதல் சுற்றுடன் வெளியேறியது. இதன்பின் இந்திய அணியின் கேப்டனாக தோனியும், பயிற்சியாளராக கேரி கிறிஸ்டனும் வந்தே மீட்டெடுத்தனர்.

கிரேக் சேப்பல் காலத்தில் சீனியர் வீரர்களுக்கு மரியாதை அளிக்கப்படவில்லை. கேப்டனாக இருந்த போது பிடிவாதமாக கிரேக் சேப்பலை பயிற்சியாளராக வேண்டும் என்று அழைத்து வந்த கங்குலியையே வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் சச்சினின் பேட்டிங் வரிசை மாற்றம் செய்யப்பட்டு அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
தற்போது கவுதம் கம்பீரின் காலத்திலும் அதேபோன்ற தவறுகள் அரங்கேறி வருகிறது. கவுதம் கம்பீர் பொறுப்புக்கு வந்த பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரையும் ஓய்வு பெறும் சூழலை உருவாக்கினார். அஸ்வினுக்கு வாய்ப்பு அளிக்காமல் ஓய்வு பெற வைத்தார். முகமது ஷமியை கண்டுகொள்ளாமல், ஹர்சித் ராணாவை தொடர்ச்சியாக தேர்வு செய்து வருகிறார்.
கிரேக் சேப்பல் காலத்தில் ஆல்ரவுண்டர்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை போலவே தற்போது கம்பீரும் முக்கியத்துவம் அளித்து வருகிறார். கிரேக் சேப்பல் காலத்தில் தான் இர்ஃபான் பதான் தொடக்க வீரராக ஆடிக் கொண்டிருந்தார். அதுபோல் நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ஜடேஜா என்று 4 ஆல்ரவுண்டர்களை ஒரே போட்டியில் ஆட வைக்கிறார் கம்பீர்.
ஆனாலும் அவர்கள் 4 பேரையும் ஒழுங்காக கூட பயன்படுத்துவதில்லை. மறுபக்கம் தாம் சொல்வதையே வீரர்கள் கேட்க வேண்டும் என்பதில் கம்பீர் பிடிவாதம் காட்டி வருகிறார். தற்போது செய்தியாளர் சந்திப்பில் கூட, இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை டிரா செய்ததை பெருமையாக கூறுகிறார். சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசியக் கோப்பையை வென்றதை பெருமையாக சொல்கிறார்.
ஒயிட் பால் வெற்றியையும், டெஸ்ட் கிரிக்கெட் தோல்வியையும் ஒப்பிட முடியும் என்றால், அது கம்பீரால் மட்டுமே முடியும். அதேபோல் இன்னும் 3 மாதத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் நடக்கவுள்ளது. இனி 10 மாதங்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி பங்கேற்காது என்பதால், கம்பீர் தொடர்ந்து பயிற்சியாளராக செயல்படுவார் என்றே தெரிகிறது. இதனால் இந்திய கிரிக்கெட்டின் இருண்ட காலம் மீண்டும் தொடங்கிவிட்டதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications