சென்னை: நடுரோட்டில் நகைக்கடை அதிபரை வெட்டி 1.5 கிலோ நகை கொள்ளை
சென்னை: சென்னையில் பரபரப்பான அண்ணா சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நகைக்கடை அதிபரை அரிவாளால் வெட்டிய மர்மநபர்கள் ஒன்றரைக்கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச்சென்றுள்ளனர்.
சென்னை ராயபுரத்தில், நகைக்கடை நடத்தி வருபவர் கீமந்த்ராம் (வயது 48). இவர் சென்னை ஆழ்வார்திருநகரில் குடும்பத்துடன் வசிக்கிறார். நேற்று இரவு 8 மணி அளவில், கீமந்த்ராம் தனது நகைக்கடையில் இருந்து, ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அண்ணா மேம்பாலத்தை தாண்டி தியாகராயநகர் நோக்கி செல்லும்போது, 4 மோட்டார் சைக்கிள்களில் 8 பேர் கும்பல் வந்து, கீமந்த்ராமை மடக்கினார்கள். அவரை ஸ்கூட்டரை விட்டு கீழே தள்ளினார்கள். பின்னர் அவரை அரிவாளால் வெட்டினார்கள்.
அவரது ஸ்கூட்டரில் வைத்திருந்த பைக்குள் 1.5 கிலோ எடையுள்ள தங்க நகைகள் இருந்தன. அந்த நகைகளை கொள்ளை அடித்துக்கொண்டு, 8 பேரும் மீண்டும் மோட்டார் சைக்கிள்களில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டனர்.
அரிவாள் வெட்டில் கீமந்த்ராமின் கைகளில் காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது. அவர் ரத்தம், சொட்ட, சொட்ட தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் கொடுத்தார். தப்பி ஓடிய கொள்ளையர்களை பிடிக்க சென்னை முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
கீமந்த்ராம், நகைகளுடன் ஸ்கூட்டரில் வருவதை முன் கூட்டியே தெரிந்து கொண்டு, 8 கொள்ளையர்கள் 4 மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து வந்து கொள்ளை அடித்துள்ளனர். தப்பி ஓடிய கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications