ஒருவேளை நான் முதல்வராக வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்பினால், அன்றைக்கு பார்க்கலாம்...
-ஜெயலட்சுமி
காந்தீய மக்கள் கட்சி 2016 சட்டமன்ற தேர்தலில் களம் காணும். ஆனால் தான் ஒருபோதும் பதவிக்காக ஆசைப்படவில்லை. எந்த பதவியையும் விரும்பவில்லை என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி தோல்வியடையக் காரணம் விஜயகாந்தும், ராமதாசும்தான் என்று ஆணித்தரமாக கூறிய மணியன், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் இந்த அணி கூட்டணியில் நீடிக்குமா என்பது சந்தேகம்தான் என்றும் கூறினார். ஒன் இந்தியா தமிழ் இணையத்தளத்திற்கு தமிழருவி மணியன் அளித்த சிறப்புப் பேட்டி:

தோல்வி என்பது மிகப்பெரிய பொய்...
கேள்வி: நீங்கள் விரும்பியவாறே மத்தியில் தனிப்பெரும்பான்மையோடு மோடி ஆட்சி அமைந்துவிட்டது. ஆனால் தமிழகத்தில் நீங்கள் அமைத்த அணி தோற்றுவிட்டதே?
தமிழருவி மணியன்: நிச்சயமாக, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது என்பது மிகப்பெரிய பொய். தமிழ்நாட்டில் அதிமுக, திமுக தவிர மாற்று அணி எதுவும் 10% வாக்குகளை பெற்றதில்லை. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 75 லட்சம் வாக்குகளைப் பெற்றது. அதிமுக, திமுக ஆதரவின்றி தனியாக கூட்டணி அமைத்து 10 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது.

புறக்கணிப்படவில்லை
தமிழக மக்கள் தேசிய ஜனநாயக் கூட்டணியை புறக்கணிக்கவில்லை. 75 லட்சம் வாக்குகளை இந்த கூட்டணி வேட்பாளர்களுக்கு அளித்துள்ளனர். ஒரே நாளில் ரோம சாம்ராஜ்யம் கட்டி முடிக்கப்படவில்லை. இது 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி நடப்பதற்கான முன்னோட்டம்.

விஜயகாந்த்– ராமதாஸ் ஊசலாட்டம்..
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் ஆரம்ப கால ஊசலாட்டமும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களின் ஒத்துழைப்பு இன்மையுமே வாக்கு சதவிகிதம் குறைந்து போனதற்கு காரணம். வண்டலூரில் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்திலேயே கூட்டணித் தலைவர்கள் ஒன்றிணைந்திருந்தால் ஒரு கோடி வாக்குகளை நிச்சயம் பெற்றிருக்க முடியும். 25% வாக்குகளைப் பெற்றிருக்க முடியும்.

திமுக பின்னுக்குத் தள்ளி
இதில் தவறு செய்தவர்கள் ராமதாஸ் அவர்களும், விஜயகாந்தும், ராமதாசும்தான் என்பதை சொல்வதற்கு அச்சப்படவில்லை. என்றாலும் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 7 தொகுதிகளில் திமுகவை பின்னுக்குத் தள்ளி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளனர்.

2016 சட்டமன்றத் தேர்தல்
கேள்வி: 2016 சட்டமன்ற தேர்தலிலும் பாஜக- தேமுதிக- பா.ம.க- மதிமுக கூட்டணி தொடருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா? அப்படி ஒரு கூட்டணிக்காக முயற்சிப்பீர்களா?
தமிழருவி மணியன்: அதுதான் என்னுடைய விருப்பம். ஆனால் அதுபோன்ற கூட்டணி அமையாது என்பதே எதார்த்தம். நாடாளுமன்ற தேர்தலில் இணைந்த கூட்டணி சட்டமன்ற தேர்தலில் தொடருமா என்பதை இப்போதைக்குச் சொல்லமுடியாது.

தேர்தலில் போட்டி
கேள்வி: காந்திய மக்கள் இயக்கம் கட்சியாகிவிட்டது. வரும் சட்டசபை தேர்தலில் காந்திய மக்கள் கட்சி போட்டியிடுமா?
தமிழருவி மணியன்: 2016 சட்டமன்றத் தேர்தலில் பாஜக, மதிமுக ஆகியோருடன் இணைந்து காந்தீய மக்கள் இயக்கம் போட்டியிடும். ஆனால் அந்த கூட்டணியில் பாமக, தேமுதிக இணையுமா என்பதை விஜயகாந்தும், ராமதாஸ் அவர்களும்தான் சொல்லவேண்டும்.

மீனவர்கள் பிரச்சினை
கேள்வி: பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி அமைந்த பின்னரும் தமிழக மீனவர்களின் பிரச்சினை ஓயவில்லையே? கைது நடவடிக்கையும், தாக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது?
தமிழருவி மணியன்: மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக சில தினங்களுக்கு முன்னர் வெளியுறவு விவகாரத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசியுள்ளார். மீனவர்கள் பிரச்சினையை தீர்ப்பதற்காக திட்டவரைவினை தயாரித்து அளித்துள்ளார். பத்தாண்டுகளாக புறந்தள்ளப்பட்ட மீனவர்கள் விவகாரம் ஒரு மாதத்திற்குள் முடிவுக்கு வரும் என்பதை நம்புவோம்.

வைகோவின் தோல்வி
கேள்வி: வைகோவின் தோல்வியை எப்படி பார்க்கிறீர்கள்? எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுக பொதுச்செயலர் வைகோவைத்தான் முதல்வராக முன்னிறுத்தி கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொள்வீர்களா?
தமிழருவி மணியன்: வைகோவின் தோல்வியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தங்களின் சொந்த தோல்வியாகவே நினைக்கின்றனர். பெருந்தலைவர் காமராஜரை தோற்கடித்த மண் விருதுநகர். ‘செக்குக்கும் சிவலிங்கத்திற்கும்' வித்தியாசம் தெரியாதவர்கள் விருதுநகர் மக்கள். மாணிக்க கற்களை தூக்கி எறிந்துவிட்டு கூழாங்கற்களை கூடையில் சுமப்பர்கள் அவர்கள். வைகோவை இருமுறை தோற்கடித்துவிட்டனர். இனி அவர் விருதுநகரில் போட்டியிடவே கூடாது என்று கூறியுள்ளேன்.

ஒன்மேன் ஆர்மி
தமிழ்நாட்டில் இருந்து அதிமுக சார்பில் வெற்றி பெற்று போன 37 பேரும் தமிழக பிரச்சினைக்காக குரல் கொடுக்கப் போவதில்லை. ஆனால் வைகோ வெற்றி பெற்று சென்றிருந்தால், ஒரே ஆளாக தமிழக மக்களுக்காக குரல் கொடுத்திருப்பார். ஆனால் அதற்கான வாய்ப்பினை விருதுநகர் மக்கள் வழங்கவில்லை.

தமிழீழ பிரச்சினை
கேள்வி: தமிழீழப் பிரச்சனையில் முந்தைய காங்கிரஸ் அரசின் கொள்கையைத்தானே பாஜகவும் பின்பற்றுகிறது.. பதவியேற்பு விழாவுக்கே ராஜபக்சேவை அழைத்த பாஜக அரசு, தமிழீழத்தை ஆதரிக்க மாட்டோம் என்கிற பாஜக அரசு எப்படி ஈழத் தமிழருக்கு உரிமைகளைப் பெற்றுத்தரும் என எதிர்பார்க்கிறீர்கள்?
தமிழருவி மணியன்: நானே பிரதமர் நாற்காலியில் அமர்ந்தால் கூட தமிழீழத்தை வெளிப்படையாக ஆதரிக்க முடியாது. ஏனெனில் பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும். காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்த முடியாத நீங்கள், இலங்கை பிரச்சினையில் தலையிட முடியுமா என்ற கேள்வி எழும். வடகிழக்கு மாகாணங்கள் பிரிவினையை பேசுகின்றன. வடக்கே பாகிஸ்தானும், சீனாவும் வாலாட்டுகின்றன. தெற்குப் பகுதியில் இலங்கைக்கு சீனா உதவி செய்கிறேன் பேர்வழி என்று நம்மை அடக்க நினைக்கிறது. எனவேதான் இலங்கையுடனான இணக்கமான போக்கை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

மோடியின் நடவடிக்கை
பத்தாண்டுகாலம் காங்கிரஸ் அரசு இலங்கையுடன் இன அழிப்பில் இணக்கமாக இருந்தது. அந்த தவறை மோடி அரசு ஒருபோதும் செய்யாது. ஏனெனில் சார்க் நாடுகளைச் சேர்ந்த தலைவர்களை பதவியேற்புக்கு அழைத்த நரேந்திர மோடி, அவர்களுக்கு அளிக்க இருந்த விருந்தினை ரத்து செய்தார். காரணம் இலங்கையில் தமிழகர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை நேரடியாக மோடியை சந்தித்து வைகோ தெரிவித்தார். அதன் பின்னரே குடியரசுத் தலைவர்தான் விருந்தளித்தார்.

நான் பதவியை விரும்பாதவன்
கேள்வி: உங்களுக்கு ஆளுநர் பதவி கிடைக்கப் போவதாக செய்திகள் வந்தன.. நீங்களும் அப்படித்தான் செய்தி கிடைத்ததாக சொல்லி இருந்தீர்கள்.. என்ன நடந்தது என விளக்கமாக சொல்ல இயலுமா?
தமிழருவி மணியன்: நான் பதவியை விரும்பவில்லை. எந்த பதவியை எதிர்பார்த்தும் இதுவரை செயல்படவில்லை. நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட காந்தியடிகள், ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோர் பதவிக்கு ஆசைப்பட்டவர்கள் இல்லை. அவர்களின் வழியை நான் பின்பற்றுகிறேன். பெரியார் தனக்கு கிடைத்த பதவியை உதறியவர். அந்த வரிசையில் தமிழருவி மணியன் பெயர் இடம்பெற வேண்டும் என்று நினைக்கிறேன். காந்தீய மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ஒழுக்கமுள்ள வேட்பாளர்களை தேர்தலில் போட்டியிடச் செய்வோம். அவர்கள் வெற்றி பெற உழைப்போம். ஒருவேளை நான் முதல்வராக வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்பினால், அன்றைக்கு பார்க்கலாம்.

வைகோவின் முன்கோபம்
கேள்வி: உங்களது மதிப்புக்குரிய நண்பர் வைகோவிடம் பிடிக்காத, விரும்பாத அம்சம்?
தமிழருவி மணியன்: தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்களில் அரிதினும் அரிதாக நல்லொழுக்கம், போர்க்குணம் கொண்டவர் வைகோ. திறமையோடு ஒழுக்கமும் கொண்ட தலைவர். அது அவரிடம் பிடித்தமான விசயம். அதேசமயம் அதிகமாக முன்கோபம் கொண்டவர். எளிதில் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவுதான் அவரை பலவீனம் அடையச் செய்து தோல்விக்கு காரணமாகிவிடுகிறது. இது பிடிக்காத அம்சம்.

தேமுதிக ஆசைப்படலாமா?
கேள்வி: மத்திய அமைச்சரவையில் பாமக, தேமுதிகவுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று கூறப்பட்டது.. ஆனால் அது நடைபெறாமல் போனது.. அதுபற்றி?
தமிழருவி மணியன்: அதற்கு வாய்ப்பு இருப்பதாக நம்பவில்லை. 14 தொகுதிகளில் தோல்வியை தழுவிய தேமுதிக எப்படி அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட முடியும்?. பாமகவின் அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்றிருந்தாலும் அவர்மீது சிபிஐ வழக்கு உள்ளது. அதிலிருந்து அவர் வெளியே வந்து தன்னை நேர்மையானவர் என்று நிரூபிக்க வேண்டும்.

கேபினெட் அமைச்சராக
அன்புமணி ராமதாஸ் தற்போது கட்சியை வலுப்படுத்துவதில் முனைப்போடு இருக்கிறார். அவர் கேபினெட் அமைச்சராக இருந்தவர் அவருக்கு இணை அமைச்சர் பதவி கொடுப்பது சரியாகாது. அதே சமயம் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு இணை அமைச்சர் பதவி கொடுத்துவிட்டு அன்புமணிக்கு கேபினெட் அமைச்சர் பதவி கொடுக்கமுடியாது.

கொல்லைப்புறம் வழியாக
மக்களால் புறக்கணிக்கப்பட்ட விஜயகாந்த் கொல்லைப்புறம் வழியாகப் போய் தனக்கு வேண்டியவர்களுக்கு அமைச்சர் பதவி வாங்கவேண்டும் என்று நினைக்கக் கூடாது. மோடி அதற்கு இடமளிக்கமாட்டார். அதுதான் மோடிக்கு சிறப்பளிக்கும்.

பாஜகவில் சேரமாட்டேன்
கேள்வி: பாரதிய ஜனதா கட்சியில் சேர உங்களுக்கு அழைப்பு வந்தால்..?
தமிழருவி மணியன்: பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், தேர்தலுக்கு முன்பே என்னை பாஜகவில் சேருமாறு அழைப்பு விடுத்தார். இன்று, நேற்றல்லா 1980களிலேயே எனக்கு பாஜகவில் சேர அழைப்பு வந்தது. ஆடிட்டர் குருமூர்த்தி என்னை அழைத்தார். ஆனால் காமராஜரை பின்பற்றும் நான் பாஜகவில் இணையமாட்டேன் என்று கூறிவிட்டேன். இன்றைக்கும் அதே நிலைப்பாட்டுடன்தான் இருக்கிறேன்.

பழ. நெடுமாறன்
கேள்வி: தமிழ்த் தேசிய இயக்கங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பழ. நெடுமாறன் மீண்டும் இறங்கியுள்ளாரே?
தமிழருவி மணியன்: ஆண்டிகள் ஒன்றாக சேர்ந்து மடம் கட்டியது போலத்தான். தமிழ் தேசிய இயக்கங்கள் ஒன்றிணைவது என்பது. பழ. நெடுமாறன் மிகவும் நல்ல உள்ளம் கொண்டவர். இந்திரா காந்தியே பாராட்டியவர். காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் வெளியேறி தமிழக மக்களின் நன்மைக்காக போராடி வருகிறார். ஆனால் தேச ஒற்றுமையை மறந்துவிட்டு தமிழக பிரிவினை பேசுபவர்களை ஒன்றிணைத்தால் எந்த நன்மையும் விளையப் போவதில்லை.

தமிழகம் சிதறுண்டு போகும்
இந்தியாவில் இருந்து தமிழகத்தை பிரித்தால், பின்னர் தமிழகமே வடக்கே வன்னியர் மண்டலம், மேற்கே கவுண்டர் மண்டலம், தெற்கே நாடார் தென்மண்டலம், முக்குலத்தோர் மறவர் சீமை என சிதறுண்டு போக வாய்ப்புள்ளது. எனவே காஷ்மீர் முதல் குமரி வரை ஒன்று பட்ட இந்தியாவாக இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.

பார்ப்பன எதிர்ப்பு வேண்டாம்
கேள்வி: திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்த வே. ஆனைமுத்து, கோவை ராமகிருட்டிணன், கொளத்தூர் மணி, விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் மீண்டும் தி.க.வுடன் இணைந்து கூட்டியக்கமாக செயல்பட போவதாக வரும் செய்திகள் பற்றி?
தமிழருவி மணியன்: அப்படி ஒரு முயற்சி எடுத்தால் நல்லது. ஒரே கொள்கையை கொண்டவர்கள் தனித்தனியாக கடை விரிப்பதை விட ஒன்றாக இணைந்து மக்கள் பிரச்சினைக்காக போராடுவதில் தவறில்லை. ஆனால் இன்னமும் பார்ப்பன எதிர்ப்பு என்ற கோஷத்தை முன்வைத்து போராடுவது எடுபடாது. வளர்ச்சியை முன்னெடுத்து அவர்களின் போராட்டம் இருக்கவேண்டும்.












Click it and Unblock the Notifications