விநாயகர் சதுர்த்தி: சென்னையில் 1800 இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி.. 12,000 போலீஸ் பாதுகாப்பு
சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை நகரில் 1800 இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. மேலும் 12,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
ஆகஸ்ட் 29ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மற்றும் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாகயர் சதுர்த்தியைக் கொண்டாட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்காக 12,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

1800 இடங்களில் சிலை
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் 1800 இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க போலீஸார் அனுமதி கொடுத்துள்ளனர். புதிய சிலைகள் வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கொசப்பட்டையில் தயாராகும் சிலைகள்
சிலைகளை வைக்கும் பணியில் பலரும் தற்போதே இறங்கி விட்டனர். சென்னை கொசப்பேட்டையில்தான் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படும். அங்கு தற்போது விதம் விதமான விநாயகர் சிலைகள் தயாரிப்புப் பணி தீவிரமடைந்துள்ளது.

விநாயகர் சிலை ஊர்வலம்
இந்து முன்னணி சார்பில் சிந்தாதிரிப்பேட்டையில் ராமகோபாலன் பங்கேற்கும் ஊர்வலத்தில் ஏராளமான சிலைகள் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படும். இந்த முறையும் ராமகோபாலன் பங்கேற்கும் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

தீவிர ஆலோசனையில் போலீஸார்
பல்வேறு இந்து அமைப்புகள் சார்பிலும் விநாயகர் சிலை ஊர்வலங்கள் தனித் தனியாக நடத்தப்படும். இந்த ஊர்வலம் பாதையில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்து சென்னை மாநகர போலீசார் கடந்த 1 வாரமாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

3 இடங்களில்
சென்னையில் பட்டினப்பாக்கம், திருவொற்றியூர், பெசன்ட்நகர் ஆகிய 3 இடங்களில் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்படும். பட்டினப்பாக்கத்தில் ஏராளமான சிலைகள் கரைக்கப்படுவது உண்டு. அங்கு விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் தினத்தில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

29ம் தேதி முதல் சிலைகள் கரைப்பு
வருகிற 29-ந்தேதியில் இருந்து விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்படும் நாள் வரை 1 வார காலத்துக்கு 12 ஆயிரம் போலீசார் சென்னையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

நாளை இந்து அமைப்புகளுடன் ஆலோசனை
சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் விநாயகர் சிலை விழாக் கமிட்டியினர் மற்றும் இந்து அமைப்புகளுடன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நாளை (25-ந்தேதி) ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் கமிஷனர்கள் ஆபாஷ்குமார், கருணாசாகர் ஆகியோர் இணைந்து இக்கூட்டத்தை நடத்துகிறார்கள். இதில் கலந்து கொள்வதற்காக இந்து இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் இந்த கூட்டத்தில் கூடுதலான இடங்களில் சிலைகளை வைப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்து அமைப்பினர் வலியுறுத்த உள்ளனர். இது பற்றி போலீசார் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள்.

நிபந்தனைகள்
விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும் பகுதியில் 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் விழாக் கமிட்டியை சேர்ந்த ஒருவர் இருக்க வேண்டும். சர்ச்சையை கிளப்பும் வகையில் ஒலி பெருக்கிகளில் பேசக்கூடாது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை சிலைகளுக்கு அருகில் வைக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

வட சென்னையில் கூடுதல் பாதுகாப்பு
கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது வடசென்னை பகுதியில் ஒரு சில பிரச்சினைகள் ஏற்பட்டன. இந்த ஆண்டு எந்தவிதப் பிரச்சினைகளும் ஏற்படாத வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியான முறையில் நடத்தி முடிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

கமிஷனர் பார்க்க சிறப்பு வசதி
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை கமிஷனர் அலுவலகத்தில் இருந்தபடியே ஆணையர் ஜார்ஜ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேரடியாக பார்க்கும் வகையில் சிறப்பு கேமரா வசதிகளும் செய்யப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications