மதுரை கூடலழகர் கோயில் யானை உயிரிழப்பு: பக்தர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி !
மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் யானை மதுரவல்லி உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தது. யானையின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
மதுரை, கூடலழகர் பெருமாள் கோயில் யானை மதுரவல்லி (49). கோயில் சேவைக்காக கடந்த 44 ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வந்துள்ளது மதுரவல்லி. பாகன் ரவிச்சந்திரன் யானையை பராமரித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரவல்லிக்கு சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மதுரவல்லியின் உடல்நிலை மோசமானது.

இதையடுத்து கோயில் நிர்வாகத்தினர், கால்நடை மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சையளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மதுரவல்லி பரிதாபமாக இறந்தது. இதனால் பூஜைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.
பின்னர் ராட்சத கிரேன் மூலம் யானையின் சடலத்தை லாரியில் ஏற்றிச்சென்று ஊர்வலமாக பெரியார் பேருந்து நிலையம், திருப்பரங்குன்றம் சாலை வழியாக மதுரை கல்லூரி அருகே உள்ள கோயிலுக்கு சொந்தமான நந்தவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு சிறப்பு பூஜைகள் நடத்திய பின்னர் இரவில் அடக்கம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கண்ணீர் மல்க யானைக்கு அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications