விதிமுறை மீறல்.. நள்ளிரவில் சிக்கிய நடிகர் ஜெய்.. வித்தியாச 'தண்டனை' கொடுத்த டிராபிக் போலீஸ்
Recommended Video

சென்னை: அதிக சத்தத்தோடு காரை இயக்கிய நடிகர் ஜெய் போலீசில் பிடிபட்டார். அவரை வைத்தே விழிப்புணர்வு வீடியோவை ரெடி செய்து அசத்தியுள்ளது காவல்துறை.
நடிகர் ஜெய், கிசுகிசுக்களுக்கு மட்டுமல்ல, ரியல் லைஃபில், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாதவர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி அடையாறு மேம்பாலத்தில் குடிபோதையில் காரை ஓட்டி பாலத்தில் மோதச் செய்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சர்ச்சை நாயகன்
இதுதொடர்பாக ஜெய் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜராகி ஜெய் விளக்கம் அளித்தார். அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு, 6 மாத காலத்திற்கு லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று இரவும் மற்றொரு சர்ச்சையில் ஜெய் சிக்கினார்.

அதிக சத்தம்
சென்னை, பெரிய மேடு பகுதியில் அதிக இரைச்சலுடன் காரை ஓட்டிச் சென்றார் ஜெய். இதற்காக சைலன்சரில் மாற்றங்களை அவர் செய்திருக்கலாம் என தெரிகிறது.

சிக்கிய ஜெய்
அதிக சத்தத்தோடு கார் வருவதை பார்த்த போக்குவரத்து போலீசார், காரை வழிமறித்து நிறுத்தினர். அப்போதுதான், காரை ஓட்டி வந்தது நடிகர் ஜெய் என தெரிந்தது. எனவே வெறும் அபராதத்தோடு விடாமல், ஜெய்யை வைத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஐடியா செய்தனர் போலீசார்.

கார் பறிமுதல்
சைரனில் அதிக சத்தம் வைத்திருந்த ஜெய்க்கு எச்சரிக்கைவிடுத்த போலீசார், விழிப்புணர்வு வாசகங்களை பேசுமாறு கூறினர். இதையேற்ற ஜெய், " இது என்னோட கார்தான். இந்த மாதிரி சத்தம் அதிகம் வச்சீங்கன்னா, டிராபிக் போலீஸ் முதலில் பிடிப்பார்கள். அதிக சத்தம் வந்தால் முதலில் காரை பறிமுதல் செய்வார்கள். மருத்துவமனைகள், பிறருக்கு இந்த சத்தத்தால் பாதிப்பு ஏற்படும். இதுக்கு மேல் யாரிடமும் இந்த சவுண்ட் இருக்க கூடாது. அதுதான் எங்கள் பணிவான வேண்டுகோள். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்" என்று பேசுகிறார். அருகே நின்ற இன்ஸ்பெக்டரும், சத்தம் அதிகமாக வரும் கார்கள் பறிமுதல் செய்யப்படும் என்பதை உறுதியாக தெரிவிக்கிறார்.












Click it and Unblock the Notifications