‛‛முகத்தில் மாஸ்க்’’.. அடையாளத்தை மறைத்து நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை யாஷிகா ஆனந்த்.. என்ன மேட்டர்?
செங்கல்பட்டு: 2021ல் நடந்த கார் விபத்து தொடர்பான வழக்கு செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று நடிகை யாஷிகா ஆனந்த் மாஸ்க் அணிந்து நீதிமன்றத்தில் ஆஜரானார்.
தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டுக்குத்து, நோட்டா உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் தான் கடந்த 2021ம் ஆண்டு யாஷிகா ஆனந்த் விபத்தில் சிக்கினார். அதாவது யாஷிகா ஆனந்த் தனது நண்பர்கள் மற்றும் தோழியுடன் புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்டில் பார்ட்டி கொண்டாடினார்.
அதன்பிறகு யாஷிகா ஆனந்த் தனது நண்பர்களான சையத் (31), ஆமீர் (32 ) வள்ளிச் செட்டி பாவனி ஆகியோருடன் சென்னை நோக்கி திரும்பி கொண்டிருந்தார். கிழக்கு கடற்கரை சாலையில் வேகமாக வந்த கார் மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு என்ற இடத்தில் சாலை தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் வள்ளிச் செட்டி பாவனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நடிகை யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட மற்றவர்கள் படுகாயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இதுபற்றி மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை தொடங்கினர். இதற்கிடையே விபத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்துக்கு முதுகு தண்டில் தீவிர பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு அவர் சிகிச்சை பெற்று கொண்டார்.
தற்போது மீண்டும் அவர் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். இதற்கிடையே தான் விபத்து நடந்தபோது காரை யாஷிகா ஆனந்த் ஓட்டியதாக கூறப்படுகிறது. மேலும் விபத்து தொடர்பான வழக்கு செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணைக்கு ஆஜராக கூறியும் யாஷிகா ஆனந்த் ஆஜராகாமல் இருந்தார்.
இதையடுத்து அவருக்கு கடந்த ஆண்டு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் கைது நடவடிக்கையில் இருந்த யாஷிகா ஆனந்த் தப்பினார். மேலும் அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார். இதற்கிடையே தான் கார் விபத்து வழக்கு செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி யாஷிகா ஆனந்த் இன்று செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். தன்னை யாரும் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக யாஷிகா ஆனந்த் மாஸ்க் அணிந்து நீதிமன்றத்தில் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications