திருச்சி சிவாவை அறைந்த சசிகலா புஷ்பாவை மேற்கோள்காட்டுவதா? கருணாநிதிக்கு நமது எம்ஜிஆர் கண்டனம்
சென்னை: திமுக எம்பி திருச்சி சிவாவை அறைந்த அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பாவை மேற்கோள் காட்டி திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டதற்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான டாக்டர் நமது எம்ஜிஆர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா வசம் இருந்த துறைகள் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து அறிக்கை வெளியிட்டிருந்த கருணாநிதி, துறைகளை மாற்றுவதற்கு ஜெயலலிதா எப்படி அறிவுரை வழங்கினார்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அந்த அறிக்கையில் ஜெயலலிதாவின் கையெழுத்தை போலியாக போடுவதற்கு சிலர் முயற்சிப்பதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா கூறியிருந்தாரே? எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

அவரையே சந்தேகிக்கலாம்
இதற்கு கண்டனம் தெரிவித்து டாக்டர் நமது எம்ஜிஆர் நாளேட்டில் எழுதப்பட்டுள்ளதாவது:
சமீப காலமாக கருணாநிதிக்கு சந்தேகப் பைத்தியம் பிடித்தாட்டுகிறது. இப்படியே போனா "நான் கருணாநிதி தானா?" என்று அவர் அவரையே சந்தேகித்துக்கொள்கிற நிலைமையும் ஏற்படலாம்!

சிவாவுக்கு அறை
இவ்வாறிருக்க, மக்களிடம் வெகு காலமாக அலசப்படுகிற ஐயம் யாதெனில், அது தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆண்டிமுத்து ராசா ‘திகாரில்' ஒரு அறை பெற்றார் என்றால், தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் திருச்சி சிவாவோ தில்லி ஏர்போர்ட்டில் திருவாளர் கருணா தற்போது மேற்கோள் காட்டுகிற அந்த உத்தம அம்மையிடம் ஓங்கி நாலு ‘அறை' பெற்றார்.

சிவா பதவி ஏன் பறிக்கவில்லை?
ஆனாலும், இப்படி அறை வாங்கி அசிங்கப்பட்டுக் கிடப்பவர்களிடமிருந்து குறைந்தபட்சம் அந்த கொள்கை(?) பரப்பும் செயலாளர் பதவியைக்கூட பிடுங்குவதற்கு திராணியற்றுக் கிடக்கிறது தி.மு.க.வும், அதன் தலைமையும் என்றால் அதன் பின்னணி சமாச்சாரம் என்னவோ? என்பதுதான் அந்த ஐயம்!

வெட்கக் கேடு இல்லையா?
மு.க. முதலில் இந்த சந்தேகத்தை முன்வந்து தீர்க்க வேண்டும். ஏனெனில், அவர் கட்சி கொள்கை பரப்புச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஒருவரை பொது இடத்தில் வைத்து செவிலிலேயே அறை விட்ட பெண்ணின் செயலை கண்டிப்பதற்கு பதிலாக, அந்த சேலைக்குப் பின்னாலேயே இவரும் போய் நின்று கொண்டு மேற்கோள் காட்டுவதும், வியாக்யானம் பேசுவதும் வெட்கக்கேடு அல்லவா!
இதுதான் ஒரு தலைவனுக்கான லட்சணமா? என்று நாடு கேட்கிறது!
இவ்வாறு டாக்டர் நமது எம்ஜிஆரில் எழுதப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications