வருகிறார் ஜெயலலிதா.. நெல்லை, தூத்துக்குடியில் வரவேற்கத் தயாராகும் ஏற்பாடுகள்!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உள்ளாட்சி இடைத் தேர்தல் பிரசாரத்திற்காக வரவுள்ளதால் நெல்லையிலும், தூத்துக்குடியிலும் முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்கவும், பிரசாரத்திற்கு மக்களைத் திரட்டவும் ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு வருகிற 18-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
அதிமுக தவிர்த்து பாஜகமட்டுமே தேர்தலில் நிற்கிறது. மற்ற முக்கியக் கட்சிகளான திமுக, மதிமுக, தேமுதிக, பாமக, காங்கிரஸ் ஆகியவை மேயர் மற்றும் நகராட்சித் தலைவர் தேர்தலைப் புறக்கணித்துள்ளன. ஆனால் இவர்களின் வாக்குகள் பாஜக பக்கம் மொத்தமாக போகப் போகின்றன.

நெல்லை- தூத்துக்குடி
நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் புவனேஸ்வரியும், பா.ஜ.க சார்பில் வெள்ளையம்மாளும் போட்டியிடுகிறார்கள். அ.தி.மு.க. வேட்பாளர் புவனேஸ்வரியை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா வருகிற 14-ந்தேதி நெல்லையில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.

நெல்லையில் 3 இடங்களில்
பாளை மார்க்கெட் மைதானம், மேலப்பாளையம் சந்தை முக்கு, டவுண் வாகையடி முனை ஆகிய 3 இடங்களில் அவர் திறந்த வேனில் இருந்தபடி பேசுகிறார். இதற்காக அன்று மாலை சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஜெயலலிதா நெல்லை வருகிறார். பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது அவர் பிரசாரத்திற்கு வந்தபோது அமைக்கப்பட்ட ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கி அங்கிருந்து திறந்த வேனில் இருந்தபடி 3 இடங்களிலும் வாக்குகள் சேகரிக்கிறார்.

தூத்துக்குடியில்
இதேபோல தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அந்தோணி கிரேசை ஆதரித்து ஜெயலலிதா வருகிற 12-ந்தேதி தூத்துக்குடியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இதற்காக சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் தூத்துக்குடி வரும் அவருக்கு தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இங்கும் வேன் மூலம்
தொடர்ந்து அவர் அங்கிருந்து வேனில் டூவிபுரம் 5 வது தெரு வழியாக அண்ணாநகர் சந்திப்பு பகுதியில் திறந்த வேனில் இருந்தபடி வாக்குகள் சேகரிக்கிறார். பின்பு விவிடி சிக்னல் வழியாக சென்று பழைய மாநகராட்சி அலுவலகம் அருகேயும், கடற்கரை சாலை வழியாக சென்று திரேஸ்புரத்திலும் பேசுகிறார்.

தயாராகும் ஹெலிபேட்
ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்காக தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள எஸ்.ஏ.வி பள்ளி மைதானத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications