20 ரூபாய் வாங்கிக் கொண்டு இலவச பொருட்களுக்கு டோக்கன் கொடுத்த அதிமுகவினர்..!
நெல்லை: நெல்லையில் இலவசப் பொருட்களைப் பெறுவதற்கான டோக்கனை தலைக்கு 20 ரூபாய் வாங்கிக் கொண்டு விற்ற அதிமுகவினரால் பொதுமக்கள் கடும் கொதிப்படைந்தனர். இதையடுத்து விரைந்து வந்த மேயர் அதிமுகவினரைக் கண்டித்ததைத் தொடர்ந்து அவர்கள் இடத்தைக் காலி செய்து விட்டு ஓடி விட்டனர்.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் விடுபட்ட பகுதிகளுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு ஊர்கள், மற்றும் மாநகர பகுதிகளில் இலவச பொருட்கள் அந்தந்த பகுதி அதிமுக பிரமுகர்களால் வழங்கப்படுகிறது. இலவச பொருட்கள் வழங்குவதற்கு முன்பு டோக்கன் வினியோகம் செய்யப்படும்.
இதை வைத்து குறிப்பிட்ட தேதியில் பொதுமக்கள் இலவச பொருட்களை பெறுவர். நெல்லை மாநகராட்சி 15வது வார்டில் இலவச பொருட்களுக்கு டோக்கன் வழங்கப்படுவதாக தகவல் பரவியது. இதையடுத்து ஏராளமான ஆண்களும், பெண்களும், ரேசன் கார்டுடன் டோக்கன் வினியோகம் செய்யப்படும் இடத்துக்கு சென்றனர்.
அங்கு தெரு முனையில் டேபிள், சேர் போட்டு கொண்டு உ்ட்கார்ந்து இருந்த அதிமுகவினர் சிலர் இலவச பொருட்கள் பெற தகுதியுள்ள பயனாளர்கள் பட்டியலை வைத்து கொண்டு அந்த நம்பர்களை ரேசன் கார்டில் எழுதி ரூ.20 வசூல் செய்தனர். பொதுமக்களும் தங்களுக்கு இலவச பொருட்கள் கிடைத்தால் போதும் என்ற பெயரில் போட்டி போட்டு பணம் கொடுத்து ரேசன் கார்டில் எண்களை பதிவு செய்தனர்.
இதுகுறித்து மேயர் புவனேஸ்வரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த அவர் வசூல் வேட்டை நடத்தியவர்களை கண்டித்தார். இதையடுத்து அவர்கள் ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications