ஆக.5 முதல் தீவிர அரசியலுக்கு திரும்புகிறேன்... தினகரன் அறிவிப்பால் பரபரப்பு
ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி முதல் தீவிர அரசியலுக்கு திரும்புகிறேன் என்று அதிமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார்.
தஞ்சை: வரும் ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதியிலிருந்து தீவிரமாக அரசியலில் ஈடுபடவுள்ளதாக அதிமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டது. இதைத் தொடர்ந்து இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு இரு அணிகளும் ஒன்றிணைவது என்று முடிவு செய்யப்பட்டது.
ஆனால் ஓபிஎஸ் அணியினரோ சசிகலா, தினகரன் குடும்பத்தினரை கட்சியில் இருந்து ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதற்கேற்ப அமைச்சர்கள் ஒன்று கூடி சசிகலாவையும், தினகரனையும் ஒதுக்கி வைப்பது என்று முடிவு செய்தனர்.

தினகரன் பதில்
இரு அணிகளும் இணைந்து அதிமுக ஆட்சி மலர வேண்டும் என்பதற்காக நான் ஒதுங்கியிருக்கிறேன் என்று தினகரன் கூறிவிட்டு சிறை சென்றார். பின்னர் கூவத்தூர் பேரங்கள் ஈடேறவில்லை என எம்எல்ஏ-க்கள் முதல்வர் எடப்பாடியை நச்சரித்தனர். இந்நிலையில் தினகரன் ஜாமீனில் வந்தபோதும் அவரை ஒதுக்கி வைப்பது என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.

தினகரனுக்கு எம்எல்ஏ ஆதரவு
சிறையில் இருந்து வெளியே வந்த தினகரனை எடப்பாடி அணியின் எம்எல்ஏ-க்கள் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்து வந்தனர். இதனால் அதிமுகவில் தினகரன் தலைமையில் ஒரு அணி உருவாகி வருவதாக கருத்துகள் நிலவின. மேலும் கட்சியை ஒன்றிணைக்க 2 மாதங்கள் காத்திருக்குமாறு சசிகலா தம்மை அறிவுறுத்தியதாக தினகரன் தெரிவித்தார்.

தஞ்சையில் பேட்டி
இந்நிலையில் தினகரனும், சசிகலாவின் சகோதரர் திவாகரனும் இணைந்து தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது தினகரன் கூறுகையில், ஆக. 5-ஆம் தேதி முதல் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் ஈடுபடுவதே எனது முதல் பணி. அன்று முதல் எனது அரசியல் பிரவேசம் வேகமெடுக்கும். கட்சியையும் ஆட்சியையும் காப்பது எனது கடமை. உறவினர்கள் மத்தியில் பூசல் என்று சிலர் கூறுவது பொய்யான தகவல். என்னை தவறாக நினைத்துக் கொண்டிருக்கும் அமைச்சர்களுக்கு ஒரு நாள் உண்மை புரியும் என்றார் தினகரன்.

ஆடம்பரமின்றி விழா
இதுகுறித்து திவாகரன் கூறுகையில், தமிழக அரசு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. அமைச்சர்களும் எந்தவித ஆடம்பரமின்றி விழாக்களை நடத்தி வருகின்றனர். சசிகலாவின் சீராய்வு மனு மீதான விசாரணை முடிவுக்கு பின்னர் அதிமுகவை வலுப்படுத்துவோம்.

ஓபிஎஸ் பங்காளி
எங்கள் அணியிலிருந்து பிரிந்து சென்ற ஓ.பன்னீர் செல்வம் எங்களது பங்காளிதான். அவர் விரைவில் திரும்புவார். இரு அணிகளும் இணையும். தற்போது ஆறுக்குட்டி எம்எல்ஏ திரும்பியதை போல் மனம் மாறி அனைவரும் திரும்புவர் என்றார் திவாகரன்.












Click it and Unblock the Notifications