மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணியா? விஸ்வரூபம் எடுக்கும் பேச்சு.. பாஜக மேலிட பொறுப்பாளர் ரியாக்ஷன்!
திருச்சி: வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி அமையுமா என்ற விவாதம் அரசியல் அரங்கில் நிலவி வருகிறது. இந்நிலையில், அது பற்றிய கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார் பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா பாஜக மேலிட இணை பொறுப்பாளரும், ஆந்திர மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பொங்குலேட்டி சுதாகர் ரெட்டி திருச்சியில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், முதல்வர்கள், ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றுள்ளது.

நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக தவறான தகவல்களை உருவாக்குகிறார்கள். ஓட்டுக்காக திமுக அரசு, தவறான தகவல்களை பரப்பி வருகிறது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, மணல் கொள்ளை, ஊழல் என்று தொடர்ந்து நடந்து வருகிறது. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு ஊழல் புகாரில் சிக்கி வருகிறார்கள். ஊழல் புகாரில் சிறை சென்று ஜாமீனில் வெளியே வந்தவருக்கு அமைச்சர் பதவி வழங்கி உள்ளது, திமுக அரசு. திமுக நிர்வாகிகள் கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார்கள்.
வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு மக்களை திசை திருப்பும் நோக்கில் புதிய கல்விக் கொள்கை, இந்தி திணிப்பு என்று பல்வேறு பொய்யான பிரச்சாரங்களை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் செய்து வருகிறார்கள்.
மத்திய அரசின் நிதி மூலம் தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. திமுக அரசு மக்களிடம் வாக்கு பெறுவதற்காக மத்திய அரசை தொடர்ந்து குறை கூறி வருகிறது. தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மாநிலங்கள் வளர்ச்சி அடையாமல் தோல்வி அடைந்துள்ளது.
அந்தவரிசையில் தற்போது தமிழ்நாடு சென்று கொண்டிருக்கிறது. தோல்வி அடைந்த மாநிலங்களின் முதல்வர்கள் ஒன்று கூடி ஆலோசனைக் கூட்டம் நடத்தி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்து இதுவரை எத்தனை திட்டங்கள் செயல்படுத்தி உள்ளார்கள். எத்தனை திட்டங்கள் நிலுவையில் உள்ளது. மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட நிதியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் என்னென்ன? என அனைத்தையும் வெள்ளை அறிக்கையாக கொடுக்க தயாரா?" எனக் கேள்வி எழுப்பினார்.
அதிமுக உடன் மீண்டும் கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த சுதாகர் ரெட்டி, "வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா? என்பது குறித்து எதுவும் சொல்ல முடியாது. தேர்தல் நேரத்தில் மேலிடம் அதற்கான விடையை தருவார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாக அதிமுக-வை தாக்கி பேசி வந்ததால், 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், கூட்டணி முறிந்ததாக அதிமுக அறிவித்தது. நாடாளுமன்ற தேர்தலை தனித்தனியே கூட்டணி அமைத்து சந்தித்தனர். தமிழ்நாடு + புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக, பாஜக கூட்டணிகள் தோல்வியைத் தழுவின.
தற்போது திரைமறைவில் நடக்கும் பேச்சுவார்த்தையில் அதிமுக பா.ஜ.க கூட்டணி மீண்டும் மலரப்போகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். தேர்தல் நெருங்க நெருங்க பல திருப்பங்கள் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூட்டணி தொடர்பாக பட்டும் படாமல் பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications