அம்மாவின் ஆன்மா உத்தரவிட்டது.. அண்ணனிடம் வந்து விட்டேன்.. திருப்பூர் எம்.பி.சத்ய பாமா!
திருப்பூர் லோக்சபா தொகுதி எம்.பி சத்யபாமா இன்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அம்மாவின் ஆன்மா உத்தரவிட்டதால் அண்ணன் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவிக்க வந்துள்ளதாக கூறினார்.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நாமக்கல் எம்பி சுந்தரம், கிருஷ்ணகிரி எம்பி அசோக் குமார் ஆகியோர் இன்று காலையில் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர். இப்போது திருப்பூர் எம்.பி சத்தியபாமாவும் ஆதரவு தெரிவித்துள்ளார். அம்மாவின் ஆன்மா உத்தரவிட்டதால் இங்கு வந்ததாக கூறினார்.
அதிமுக கட்சி ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டாக பிளவுபட்ட நிலையில், இருதரப்பினரும் தங்களது பலத்தை நிரூபிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏற்கனவே 6 சட்டசபை உறுப்பினர்களும், ராஜ்யசபா உறுப்பினர் மைத்ரேயனும் ஆதரவு தெரிவித்தனர்.
முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, பொன்னுசாமி, நத்தம் விசுவநாதன், அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன், முன்னாள் நிதியமைச்சர் பொன்னையன் உள்ளிட்ட அதிமுகவின் பல்வேறு நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சனிக்கிழமை கிருஷ்ணகிரி லோக்சபா உறுப்பினர் அசோக்குமார், நாமக்கல் லோக்சபா உறுப்பினர் சுந்தரம் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு நேரில் சென்று அவருக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார்.
தொடர்ந்து பல நிர்வாகிகள் ஓபிஎஸ்ஐ நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மாலையில் திருப்பூர் லோக்சபா எம்.பி சத்தியபாமா முதல்வர் பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், செய்தியாளர்களிடம் பேசிய சத்யபாமா அம்மாவின் ஆன்மா கூறியதால் அண்ணன் ஓபிஎஸ் இடம் வந்தேன் என்றார். ஜெயலலிதா ஒதுக்கியவர்களை அழைத்து பதவி தருகிறார் என்று குற்றம் சாட்டினார். இது மிகவும் வருத்தம் தருகிறது என்றார். சசிகலா ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்து விட்டார். ஜெயலலிதாவுக்கு ஈடு யாரும் கிடையாது. யாரும் வரவும் முடியாது. ஜெயலலிதாவுக்கு கொடுத்த வாக்குகள் எதையும் சசிகலா நிறைவேற்றவில்லை.
ஜெயலலிதாவின் நல்லாசியுடன் புதிய ஆட்சி அமையும். தொடர்ந்த போன் கால்களால் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு உணர்த்திய எனது தொகுதி மக்களுக்கு நன்றி. மக்களின் வாக்குகள் எல்லாம் ஜெயலலிதாவுக்கு மட்டும் விழுகிறது. எனக்காக யாரும் ஓட்டு போடவில்லை ஜெயலலிதாவிற்கு மட்டுமே மக்கள் ஓட்டு போட்டார்கள் என்றார். ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. 3வது லோக்சபா எம்.பி இன்று ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications