2 பிரிவுகளாக நிற்கும் திண்டுக்கல் சீனிவாசன் - நத்தம் விஸ்வநாதன்.. அதிமுக அலுவலகத்திற்கு பூட்டு!
திண்டுக்கல்: அதிமுக 2 பிரிவாக பிளவுபட்டுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களிலும் கட்சி அலுவலகங்களில் மோதல்கள் வெடித்து வருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் செல்வாக்கு மிக்க நத்தம் விஸ்வநாதன் - திண்டுக்கல் சீனிவாசன் இருவரும், இரு தரப்பாக பிரிந்துள்ளதால் அதிமுக அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் பூட்டு போடப்பட்டுள்ளது.
1971 ஆம் ஆண்டு எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தற்போது இரண்டாக பிளவுபட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில் ஒரு அணியாகவும், சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தலைமையில் மற்றொரு அணியாகயும் செயல்பட்டு வருகின்றனர்.

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு எஸ்பி வேலுமணி தலைமையிலான அதிமுகவின் எம்.எல்.ஏக்கள் 25 பேர் ஆதரவு அளித்துள்ளனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி அணியின் 22 அதிமுக எம்.எல்.ஏக்கள், விஜய் அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்தனர்.
இதனைத் தொடர்ந்து எஸ்பி வேலுமணி - சிவி சண்முகம், அவர்களது அணியில் உள்ள நத்தம் விஸ்வநாதன், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்டோரின் கட்சி பதவிகளை பறித்துவிட்டு புதிய மாவட்ட செயலாளர்களை எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார்.
இதன் காரணமாக மாவட்டங்களில் உள்ள கட்சி அலுவலகத்தை கைப்பற்றுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஆங்காங்கே மோதல் ஏற்பட்டு வருகிறது. விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிமுக அலுவலகத்துக்குள் புதிய மா.செ.க்கள் செல்ல முயன்றனர். இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனையடுத்து அதிமுக அலுவலகங்கள் பூட்டப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். அதே நேரம் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் எஸ்பி வேலுமணி தரப்பு ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார்.
இதனையடுத்து திண்டுக்கல் - நத்தம் சாலையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் இரு தரப்பினரிடையே எவ்வித பிரச்சனையும் ஏற்படக்கூடாது என்பதற்காக அதிமுக பொதுக்குழு உறுப்பினரும் நத்தம் விஸ்வநாதன் எம்எல்ஏ ஆதரவாளருமான நெப்போலியன் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதிபிடம் மனு அளித்துள்ளார்.
அதில் இருதரப்பினர் இடையே எவ்வித மோதல் போக்கும் ஏற்படக்கூடாது என்பதற்காக அலுவலகத்தை பூட்டி போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து இருதரப்பினரும் கட்சி அலுவலகத்திற்கு வரக்கூடாது என்பதற்காக அலுவலகம் பூட்டப்பட்டு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications