பெட்ரோல், டீசல் விலை உயர்வு... மனிதநேயமற்ற கொள்கை: அன்புமணி கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் ஏற்படும் சுமையை மக்கள் தாங்க வேண்டும் என்பது மனிதநேயமற்ற கொள்கை என பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-

Anbumani slams petrol price hike

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துவிட்டதாகக் கூறி பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் ஒருமுறை உயர்த்தியிருக்கின்றன. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4.18 ரூபாயும், டீசல் விலை 2.25 ரூபாயும் உயர்ந்துள்ளன. இது கண்டிக்கத்தக்கதாகும்.

பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தில் மத்திய அரசு மக்கள் விரோத அணுகுமுறையை கடைபிடித்து வருகிறது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போது அதன் பயனை மக்களுக்கு வழங்காமல் கலால் வரி உயர்வு என்ற பெயரில் தாம் அனுபவித்துக் கொள்ளும் மத்திய அரசு, கச்சா எண்ணெய் விலை உயரும் போது அதன் சுமையை மட்டும் மக்கள் மீது சுமத்துகிறது.

கடந்த சில மாதங்களில் மட்டும் பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 7 ரூபாய் 75 பைசாவும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 6 ரூபாய் 50 பைசாவும் உயர்த்திக்கொண்ட மத்திய அரசு, இப்போது கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள பட்சத்தில், கலால் வரியை குறைத்துக்கொண்டு எரிபொருள் விலை உயராமல் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்.

ஆனால், மத்திய அரசும் அதன் வருவாயை மட்டுமே கருத்தில் கொண்டு, பொதுமக்களின் நலனை காவு கொடுத்திருக்கிறது. கச்சா எண்ணெய் விலை குறைவால் ஏற்படும் பயன்களை அரசும், எண்ணெய் நிறுவனங்களும் அனுபவிக்க வேண்டும். விலை அதிகரிப்பால் ஏற்படும் சுமையை மக்கள் தாங்க வேண்டும் என்பது மனிதநேயமற்ற கொள்கை.

அதுமட்டுமின்றி, தனியார் எண்ணெய் நிறுவனங்கள் பயனடையும் வகையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. மத்தியில் நரேந்திரமோடி அரசு பதவியேற்ற போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 106 டாலராக இருந்தது; இப்போது 62.25 டாலராக குறைந்துள்ளது. இது 40% விலை வீழ்ச்சி ஆகும். கச்சா எண்ணெய் 40% குறைந்துள்ள நிலையில் அதற்கேற்றவாறு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 29.60 குறைந்து ரூ.45.11 என்ற விலையிலும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைந்து ரூ.35.50 என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட வேண்டும்.

ஆனால், பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு முறையே ரூ.8.63, ரூ.7.74 மட்டுமே குறைக்கப்பட்டிருக்கின்றன. இதிலிருந்தே பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடைபெறவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பதால் மற்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் பெருமளவில் உயரும். ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இதனால் மேலும் துயரத்திற்கு உள்ளாவார்கள். எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அதுமட்டுமின்றி, விலை நிர்ணய அதிகாரத்தை மத்திய அரசே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+