நான் முதல்வரானால் தமிழகம் சாராயம் இல்லாத மாநிலமாகும்- சொல்கிறார் அன்புமணி
கடலூர்: நான் முதல்வரானால் ஒரு சொட்டு சாராயம் கூட தமிழகத்தில் இருக்காது என்று பாமக இளைஞரணித் தலைவரும், முதலமைச்சர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் உறுதியளித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பாமக மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்புப் போராட்டம் இன்று நடைபெற்றது. இதில் அன்புமணி பேசியதாவது:
நான்கு வயதுக் குழந்தை குடிக்கிறான். 15 வயதுப் பெண் குடித்து ரகளை செய்கிறார். 16 வயதுப் பெண் தன் தோழிகளோடு சேர்ந்து குடிக்கிறார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் பீர்பாட்டிலை வாங்கி இடுப்பில் செருகி சைக்கிளில் வரும்போது அந்த பீர் பாட்டில் வெடித்து இறக்கிறான்.

இரு மாணவர்கள் பள்ளி சீருடையில் மது அருந்தி மயக்கத்திலேயே பேருந்து நிலையத்தில் கிடக்கிறார்கள். இவையெல்லாம் எங்கே நடக்கிறது? பீகாரிலா? உத்திரப்பிரதேசத்திலா? அல்லது மகாராஷ்டிராவிலா? இல்லை... தமிழகத்தில் நடக்கிறது. இது வெட்கக்கேடானது.
தமிழன் என்று சொல்லடா...தலை நிமிர்ந்து நில்லடா என்ற சொல்லுக்கு இப்போது அர்த்தமே கிடையாது. இதுதான் நம் சாபக்கேடு. இதற்கெல்லாம் யார் காரணம்? தமிழக அரசு காரணம். திமுக தலைவர் கருணாநிதி மூல காரணம். 1971 இல் தமிழ்நாட்டுக்கு மீண்டும் மதுவை அறிமுகப்படுத்தியவர் கருணாநிதி.
1948 இல் முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமியிடம், மதுவைக் கொண்டு வந்தால் அரசுக்கு பல கோடி வருவாய் கிடைக்கும் என்று அதிகாரிகள் சொன்னார்கள். "நிச்சயமாக கொண்டுவரமாட்டேன். அது மக்களுக்கு இழப்பு" என்று சொன்னாரே அவர் முதல்வர். அதற்குப்பிறகு வந்த பக்தவச்சலம், காமராஜர், அண்ணா போன்ற முதலமைச்சர்கள் மதுவைக் கொண்டுவரவில்லை.

"மதுவால் வரும் வருமானம் குஷ்டரோகி கையில் இருக்கும் வெண்ணையைப் போன்றது" என்று அண்ணா சொன்னார். இதையெல்லாம் பொருட்படுத்தாமல், மக்களைப் பற்றி கவலைப்படாமல் கருணாநிதி 1971 இல் மதுவை மீண்டும் அறிமுகம் செய்தார். இப்போது மதுவை ஒழிக்க வேண்டும் என்று சொல்லும் கட்சிகளில் கடைசியாக திமுக சேர்ந்திருக்கிறது.
நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் மதுவை ஒழிப்போம் என்று கருணாநிதி சமீபத்தில் சொல்லியிருக்கிறார். அதையும் தெளிவாகச் சொல்லவில்லை. பூரண மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றே சொல்லியிருக்கிறார். இப்படி கருணாநிதி சொல்வது ஆறாவது முறை. 20 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் கருணாநிதி முதல்வராக இருந்தார். மதுவிலக்கு குறித்து ஐந்து முறை வாக்குறுதி கொடுத்தும் கொண்டுவரவில்லை.
இப்போது மீண்டும் ஆறாவது முறை தேர்தலுக்காக மட்டுமே சொல்லியிருக்கிறார். திமுக தொடங்கி 65 ஆண்டுகள் ஆகின்றன. இந்த காலகட்டத்தில் திமுக ஒரே ஒரு முறை கூட மதுஒழிப்பு போராட்டம் நடத்தியதில்லை. ஆனால், வரும் 10 ஆம் தேதி திமுக முதல் முறையாக மது ஒழிப்பு போராட்டம் நடத்த உள்ளது. இதற்குக் காரணம் பாமக நிறுவனர் ராமதாஸ் 35 ஆண்டுகளாக மது ஒழிப்பு போராட்டம் நடத்தி வருவதுதான். இதையெல்லாம் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்கப்போவது பாமகதான்.
தமிழக மக்கள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளிகள்,வியாபாரிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து எங்களுக்கு மாற்றம் வேண்டும், முன்னேற்றம் வேண்டும், அன்புமணி வேண்டும் என்று சொல்கிறார்கள். திமுக, அதிமுகவின் 50 ஆண்டுகால ஆட்சி போதும். புதுமை, வித்தியாசம் வேண்டும் என்று மக்கள் கேட்கிறார்கள்.

எங்களால் மாற்றத்தைக் கொடுக்க முடியும். அதற்கு மக்கள் வாய்ப்பு கொடுக்க வேண்டும். முதல்வராக அமர்ந்த ஒரு மணி நேரத்தில் ராமதாஸ் கொடுக்கும் பேனாவால் நான் போடும் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கைக் கொண்டு வருவதுதான். நான் முதல்வரானால் ஒரு சொட்டு சாராயம் கூட தமிழகத்தில் இருக்காது.
இந்தியாவில் அதிக மக்கள்தொகை இருக்கும் மாநிலம் உத்திரப்பிரதேசம். 21 கோடி மக்கள் இருக்கும் உத்திரப்பிரதேசத்தில் மது விற்பனை 11 ஆயிரம் கோடி. ஏழே கால் கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் மது விற்பனை 26 ஆயிரம் கோடி.
இந்தியாவில் அதிக சாலை விபத்துகள் நடக்கும் மாநிலம் தமிழ்நாடு, இளம் விதவைகள் அதிகம் இருப்பது தமிழ்நாடு, தற்கொலை அதிகம் நிகழ்வது தமிழ்நாடு, பெண்களுக்கு அதிக வன்கொடுமைகள் நடக்கும் இடம் தமிழ்நாடு. இதற்கெல்லாம் காரணம் மதுதான். அந்த மதுவை ஒழிக்க பாமக போராடும்.
இவ்வாறு அன்புமணி கூறினார்.












Click it and Unblock the Notifications