சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெ. நகைகள், செருப்புகளை பெங்களூர் கோர்ட்டுக்கு கொண்டு வர உத்தரவு

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா ஏற்றுக் கொண்டார்.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அன்பழகனின் வழக்கறிஞரும் தர்மபுரி எம்.பி.யுமான தாமரைச்செல்வன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
வழக்கின் முதல்கட்ட விசாரணையின்போது ஜெயலலிதாவிடம் இருந்து தங்கம், வெள்ளி, வைரம் உள்ளிட்ட 1066 சான்று பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்தப் பொருள்கள் அனைத்தும் சென்னையில் உள்ள மத்திய ரிசர்வ் வங்கியில் இருக்கிறது. 2004ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை சென்னையில் இருந்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது. அப்போது வழக்கு தொடர்பான அனைத்து அசையும் சொத்துக்களையும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்திலே வைத்து பாதுகாக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை என்று அதில் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த அரசு வழக்கறிஞர் பவானி சிங் இது குறித்த பதில் மனுவை கடந்த 6ம் தேதி தாக்கல் செய்திருந்தார். ஆனால் இதற்கு ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி. குமார் ஆட்சேபம் தெரிவித்தார். வாதங்களை கேட்ட நீதிபதி இந்த மனு குறித்த முடிவு டிசம்பர் 12ம் தேதி அறிவிக்கப்படும் என்றார்.
அதன்படி நேற்றைய விசாரணையின்போது அவர் 20 பக்கங்கள் கொண்ட உத்தரவை வாசித்தார்.
அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது,
இவ்வழக்கை கண்காணிக்கவும், மனுதாக்கல் செய்யவும் அன்பழகன் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் அதிகாரம் வழங்கி இருக்கிறது. அதனால் அவர்கள் தொடர்ந்து வழக்கில் பங்கேற்கலாம். அவர்கள் மனுவில் கோரிய வழக்கு தொடர்புடைய தங்கம், வெள்ளி, வைரம் உள்ளிட்ட நகைகள், பரிசுப் பொருள்கள், கைகடிகாரங்கள், பட்டுப்புடவைகள், செருப்புகள் உள்ளிட்ட 1066 சான்றுப் பொருள்களையும் சென்னை மத்திய ரிசர்வ் வங்கியில் இருந்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு கொண்டுவர வேண்டும்.
இதற்காக கர்நாடக நீதிமன்றத்துக்கும் தமிழக நீதிமன்றத்துக்கும் இடையேயான சட்டரீதியான நடவடிக்கைகள், காவல்துறையின் பாதுகாப்பு, அலுவலக ரீதியிலான செயற்பாடுகள் அனைத்தையும் வருகிற 21-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அதன்பிறகு வழக்கு தொடர்பான அசையும் சொத்துக்களை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு கொண்டுவர உரிய நடவடிக்கையை பதிவாளர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications