சென்னையில் பயங்கரம்: குப்பைத்தொட்டி அருகே தலை இல்லாத இளம்பெண் உடல் மீட்பு
சென்னை: சென்னை வளசரவாக்கம் பகுதியில் குப்பைத் தொட்டி அருகே தலையில்லாத நிலையில் இளம்பெண் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வளசரவாக்கம் ராயலா நகர் காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட போரூர் கிண்டி டிரங்க் ரோட்டின் ஓரத்தில் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அதனருகே குப்பைத்தொட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை அதில் கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை எடுப்பதற்காக சென்ற நபர், அதன் பின்புறம் தலையில்லாத பெண் உடல் ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக இது குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், அப்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மோப்பநாய், சிறிது தூரம் மோப்பம் பிடித்தபடி ஓடிச்சென்று நின்றது. இதனால் கொலை செய்யப்பட்ட பெண் யார், கொலையாளி யார் என்பது குறித்துப் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மீட்கப்பட்ட பெண் உடலின் தலையைத் தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மீட்கப்பட்ட உடல் போர்வையில் சுற்றப்பட்டிருந்ததால், பாலியல் பலாத்காரம் செய்து அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு உள்ளது.
இது தவிர கள்ளக்காதல் பிரச்னையால் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா? எனப் பல்வேறு கோணங்களிலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications