அதிமுகவில் ஊழல்வாதி.. திமுகவில் புனிதர் ஆகிட்டாரா? ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் சரமாரி கேள்வி
கோவை: அதிமுகவில் இருந்தபோது ஊழல்வாதியாக இருந்த செந்தில் பாலாஜி, திமுகவில் சேர்ந்து அமைச்சரானதும் புனிதர் ஆகி விட்டாரா? திமுகவின் முதல் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர் என்பதால் செந்தில் பாலாஜி குற்றமற்றவராகி விடுவாரா? என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.
செந்தில் பாலாஜி கைது தொடர்பாக தமிழக முதல்வரும் திமுக தலைருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில்,வழக்கமாக நான் 'உங்களில் ஒருவன் பதில்கள்' மூலமாக உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால், இப்போது இந்த வீடியோ மூலமாக இன்னொரு முக்கியமான விஷயம் பற்றிப் பேசப் போகிறேன். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை மூலமாக கொடுக்கப்படுகிற அநியாயமான தொல்லைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல் என்பதில் யாருக்கும் கொஞ்சமும் சந்தேகமில்லை!
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள பழைய புகாரை வைத்து, 18 மணி நேரம் அடைத்து வைத்து, மன அழுத்தம் கொடுத்து, மனரீதியாகவும் - உடல் ரீதியாகவும் பலவீனப்படுத்தி, உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் இதயநோயை உருவாக்கி இருக்கிறார்கள் என்றால், இதைவிட அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் இருக்க முடியுமா?

செந்தில் பாலாஜி மேல் புகார் இருக்கும் என்றால், அது தொடர்பாக நீதிமன்றத் தீர்ப்பு இருக்கும் என்றால், அவரை அழைத்து விசாரணை நடத்துவதை நான் தவறு என்று சொல்லவில்லை. ஓடி ஒளியக் கூடிய அளவுக்கு அவர் சாதாரணமானவர் இல்லை! அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர். அதுவும் 5 முறை சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அதுவும் இரண்டாவது முறையாக அமைச்சராக இருக்கிறார். நாள்தோறும் பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர். அப்படிப்பட்டவரை, ஏதோ தீவிரவாதியைப் போல அடைத்து வைத்து விசாரிக்க என்ன அவசியம் இருக்கிறது?
அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தபோது, முழு ஒத்துழைப்பு தந்தார். எந்த ஆவணங்களை எடுத்திருந்தாலும், அது தொடர்பாக விளக்கமளிக்கத் தயார் என்று சொல்லி இருந்தார். அதற்குப் பிறகும் 18 மணி நேரமாக அடைத்து வைத்துள்ளனர். யாரையும் சந்திக்க அனுமதி இல்லை. இறுதியாக அவருக்கு உடல்நலம் முழுமையாக பாதிக்கப்பட்டு இதயவலி அதிகமான பின்னர்தான், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதிலும் அலட்சியம் காட்டி இருந்தார்கள் என்றால், அது அவருடைய உயிருக்கே ஆபத்தாகி இருக்கும்! இப்படி ஒரு விசாரணையை மேற்கொள்ளும் அளவுக்கு அப்படி என்ன அவசரம்? அறிவிக்கப்படாத எமர்ஜென்சியில் நாடு இருக்கிறதா? அப்படித்தான் இருக்கிறது, அமலாக்கத்துறையின் நடவடிக்கை.
எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், பாஜக தலைமை, அமலாக்கத்துறை மூலமாக அவர்களது அரசியலைச் செய்ய நினைக்கிறது. மக்களைச் சந்தித்து அரசியல் செய்ய பாஜக தயாராக இல்லை. பாஜகவை நம்ப மக்களும் தயாராக இல்லை. மக்களுக்கான அரசியலை செய்தால்தான் மக்கள் பாஜகவை நம்புவார்கள். பாஜகவின் அரசியலே மக்கள் விரோத அரசியல்தான்! கருத்தியல் ரீதியாக, அரசியல்ரீதியாக, தேர்தல் களத்தில் எதிர்கொள்ள முடியாதவர்களை வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ- என விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டுவது பா.ஜ.க.வின் பாணி! அதுதான் அவர்களுக்குத் தெரிந்த ஒரே பாணி! இந்த ஜனநாயக விரோத பாணியைத்தான் இந்தியா முழுமைக்கும் அவர்கள் பின்பற்றி வருகின்றனர் என்று முதல்வர் ஸ்டாலின் நீண்ட வீடியோவில் கூறியிருந்தார்.
இதனிடையே தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் அளிக்கும் வகையில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: "பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது. 2011 முதல் 2015 வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணி நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாக, அப்போது எதிர்க் கட்சியாக இருந்த திமுக குற்றம்சாட்டியது. இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கை விசாரித்த அமலாக்கத்துறை, அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளது.
இதே குற்றச்சாட்டுக்காக செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே வலியுறுத்தினார். மத்தியில் வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்தை நடத்தி வரும் பாஜக அரசு, சட்டத்தின்படியே, அனைத்தையும் செய்து வருகிறது. அதன்படி தான், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், இதில் பழிவாங்கும் நடவடிக்கை என பழி சுமத்தி, ஊழல் ஒழிப்பு நடவடிக்கையை திசை திருப்பும் முயற்சியில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஈடுபட்டுள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது.
அதிமுகவில் இருந்தபோது ஊழல்வாதியாக இருந்த செந்தில் பாலாஜி, திமுகவில் சேர்ந்து அமைச்சரானதும் புனிதர் ஆகி விட்டாரா? திமுகவின் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர் என்பதால் செந்தில் பாலாஜி குற்றமற்றவராகி விடுவாரா? செந்தில் பாலாஜி மீது தவறில்லை என்றால் அதனை நீதிமன்றங்கள் மூலம் நிரூபிக்க அவருக்கு வாய்ப்புள்ளது. அதைவிடுத்து, 'நாங்கள் என்ன வேண்டுமானாலும் அட்டூழியம் செய்வோம். நடவடிக்கை எடுக்கக் கூடாது. அப்படி நடவடிக்கை எடுத்தாலும் தடுப்போம்' என்றால் அதனை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அனுமதிக்காது.
ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது. மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஏமாற்ற முடியாது என்பதை திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் உணர வேண்டும்" இவ்வாறு வானதி சீனிவாசன் எம்எல்ஏ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications