பட்டப்பகலில் வீடு புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி.. சென்னையில் பரபரப்பு
சென்னையில் பட்டப்பகலில் துப்பாக்கி முன்னையில் வீடு புகுந்து நடத்தப்பட்ட கொள்ளை முயற்சி, வேலைக்கார பெண்மணியன் சமயோஜித்தால் முறியடிக்கப்பட்டது.
சென்னை: பட்டப்பகலில் சென்னை நகைக்கடை உரிமையாளர் வீட்டில், துப்பாக்கியை காட்டி கொள்ளையடிக்க முயன்ற மூன்று பேர் கொண்ட கும்பலில் ஒருவர் சிக்கினார்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் முன்னாலால் (55), சென்னை, ஐஸ் ஹவுஸ், ஜானிஜான்கான் தெருவில், குடும்பத்துடன் வசித்து வருகிறார். வீட்டின் முன் பகுதியில், இவரது நகைக்கடை உள்ளது.
மனைவி மற்றும் குழந்தைகள், சொந்த ஊருக்கு சென்றிருந்த நிலையில், முன்னாலால், நேற்று காலை, 10 மணியளவில், வீட்டை திறந்து வைத்தபடி, ஹாலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

புகுந்த கும்பல்
வேலைக்கார பெண் வனிதா, வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களை போல காணப்பட்ட மூன்று பேர், திடீரென வீட்டிற்குள் புகுந்தனர்.

துப்பாக்கி முனையில்
அதில் ஒரு நபர் வனிதாவின் வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டியுள்ளார். இதை பார்த்த, முன்னாலால் அதிர்ச்சி அடைந்தார். உங்களுக்கு என்ன வேண்டும் என கேட்டுள்ளார். அந்த நபர்கள் நகை, பணம் உள்ள இடத்தை காட்டுமாறு கூறியுள்ளனர். ஆனால் முன்னாலால் யோசித்துள்ளார். இதை பார்த்த கொள்ளையர்கள் அவரை கட்டிப்போட்டு, பிளாஸ்திரியால் வாயை ஒட்ட முயன்றுள்ளனர்.

தப்பிய வேலைக்கார பெண்மணி
இந்த நேரத்தை பயன்படுத்தி, கொள்ளையர்களின் பிடியில் இருந்து தப்பிய வனிதா, வீட்டுக்கு வெளியே வந்து கூச்சல் போட்டுள்ளார். அருகில் இருந்தோர், முன்னாலால் வீட்டை நோக்கி ஓடி வந்தனர். இதைப் பார்த்ததும் பயந்த கொள்ளையர்கள் தப்பி ஓடினர். அதில் ஒருவரை, பொதுமக்கள் பிடித்து, தர்ம அடி கொடுத்து, ஐஸ் ஹவுஸ் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணை
விசாரணையில், கொள்ளையன் பெயர் ரவிக்கான் சிங் (40) என்பவதும், உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. கைதானவரிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள், எட்டு தோட்டாக்கள், இரண்டு பட்டாக் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முன்னாலால் வீட்டை பல நாட்கள் நோட்டமிட்டு, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது, விசாரணையில் தெரிய வந்துள்ளது. பிடிபட்டவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளை முயற்சி, சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications