நீலகிரியில் வேர் விட்ட தாமரை! "மாஸ்டர் மாதன்" போட்ட விதை.. எல். முருகன் பிளான் பின்னால் இவ்ளோ விஷயமா?
ஊட்டி: கோவைக்கு அடுத்தபடியாக, பாஜக பெரிதும் நம்பியிருப்பது நீலகிரி தொகுதியைதான்.. திராவிட கட்சிகளையும் தாண்டி, நீலகிரியில் பாஜகவுக்கு அப்படியென்ன பிடித்தம்? அப்படியென்ன பாஜகவுக்கு செல்வாக்கு இருக்கிறது இந்த மலை மாவட்டத்தில்?
தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், நீலகிரியிலும் பிரச்சாரம் உச்சக்கட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறது.. ஒருபக்கம் திமுகவின் ஆ.ராசா, மறுபக்கம் பாஜகவின் எல்.முருகன், இதற்கு நடுவில் அதிமுகவில், முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் என களமிறங்கியிருப்பதால், நீலகிரி தொகுதியே ஸ்டார் தொகுதியாகிவிட்டது.

எப்போதுமே நீலகிரியில் வெளியூர் வேட்பாளர்கள்தான் அதிக முறை வென்றுள்ளதால், இந்த முறையும் அப்படியே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.. திமுக வேட்பாளர் ஆ.ராசா பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். பாஜக வேட்பாளர் எல்.முருகன் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர். அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச் செல்வன் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்.. இதெல்லாம் இந்த முறை தேர்தலில் கூடுதல் ஸ்பெஷலாகிவிட்டது.
நீலகிரி பாஜக: இந்த 2 திராவிட கட்சிகளுக்கு இணையாக பாஜகவும், வெற்றிக்காக கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறது.. இதற்கு என்ன காரணம்? நீலகிரியில் பாஜகவுக்கு இருக்கும் செல்வாக்கு என்ன? இதற்கெல்லாம் முக்கிய காரணம் மாஸ்டர் மாதன் என்றே சொல்ல வேண்டும்.
யாரிந்த மாஸ்டர் மாதன்? இவர் பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் ஆவார்.. நீலகிரி மாவட்டம் படுகர் இனத்தை சேர்ந்த முக்கிய தலைவரும் ஆவார்.. கடந்த 1998, மற்றும் 1999 டூ 2004 வரை என 2 முறை எம்பியாக பாஜகவின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
பாஜக : மாஸ்டர் மாதனுக்கு பிறகுதான், நீலகிரியில் பாஜகவின் தாமரை வேர் விடத்துவங்கியது என்றே சொல்லலாம்.. அதுவரை நீலகிரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் தான் படர்ந்திருந்தது.. எனினும், 2 முறை பாஜக வெற்றிபெற்றுள்ளது. மத்திய அமைச்சராக ஆ.ராசா பொறுப்பு வகிப்பது போலவே, பாஜகவின் மாஸ்டர் மாதனும் மத்திய இணை அமைச்சராக பதவியை வகித்தவர்.. இதற்கெல்லாம் காரணம், மதனுக்கு படுகர் இன மக்களின் ஒட்டுமொத்த ஆதரவும் இருப்பதுதான்..
இப்போதும்கூட, இம்மக்களின் ஆதரவு பாஜகவுக்கு கணிசமாக இருப்பதாகவே நம்பப்படுகிறது. இந்த வாக்குகளுடன் திமுகவின் அதிருப்தி வாக்குகளையும் சேர்த்து அள்ளிவிட வேண்டும் என்பதே, தற்போதைய பாஜகவின் எண்ணமாக உள்ளது. இதை கணக்கு செய்தே, எல்.முருகன் கடந்த 2வருட காலமாகவே நீலகிரியை குறி வைத்து வருகிறார்.
எல்.முருகன்: தொகுதிக்குள் வீடுகள் எடுத்து தேர்தல் வேலையையும் பார்த்து வந்ததுடன், எதற்கெடுத்தாலும் நீலகிரிக்கும் ஒரு விசிட் அடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அதிமுக கூட்டணி வைத்துவிட்டால், தன்னுடைய வெற்றி எளிதாகும் என்று எல்.முருகன் போட்ட கணக்கு மட்டும் சொதப்பலாகிவிட்டது. எனினும், பாஜக மாதனின் ஆதரவு வாக்குகளை பிரதானமாக நம்பியிருப்பதாக தெரிகிறது.
இதுவரை நடந்த தேர்தல்களின் முடிவுகளின் புள்ளிவிவரங்களை பார்த்தாலே இது நன்றாக விளங்கும்.. இதுவரை 7 முறை காங்கிரஸ் நீலகிரியில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸின் ஆர்.பிரபு மட்டுமே இங்கு 5 முறை வெற்றி பெற்றிருக்கிறார் என்றால் பார்த்து கொள்ளுங்கள். அதேபோல, 1971, 2009, 2019 ஆண்டுகளில் திமுகவும், 1977, 2014 ஆண்டுகளில் அதிமுகவும் வெற்றி பெற்றிருக்கின்றன. 1998, 1999-ல் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது.
மாஸ்டர் மாதன்: 1998-ல் மாஸ்டர் மாதன் போட்டியிட்டு, 322818 வாக்குகளை பெற்றிருந்தார்.. இது 46.00% சதவீத வாக்கு வங்கியை தந்திருந்தது.. 1999-ல், மீண்டும் பாஜக மாதன் போட்டியிட்டு, 369828 வாக்குகளை பெற்றிருந்தார். அப்போது வாக்கு சதவீதமானது 51.00% என்று எகிறியது. கடந்த 2004-ல் மாஸ்டர் மாதன் பாஜக சார்பில் போட்டியிட்டு, 257619 வாக்குகளை பெற்றார்.. அதாவது, பாஜக வாக்கு சதவீதம் 33.00% ஆக உயர்ந்தது..
கடந்த 2019 தேர்தலில், நீலகிரியில் கடுமையான போட்டி நிலவியது என்றாலும், 73.79% வாக்குகள் அப்போது பதிவாகியிருந்தன.. ஒருவேளை, இந்த முறை அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தாலும், தனித்து போட்டியிடவே பாஜக விரும்பியிருக்கும் என்கிறார்கள்.. அந்த அளவுக்கு இந்த தொகுதி மீது முழு நம்பிக்கை வைத்துள்ளது.
போராட்டங்கள்: அவ்வளவுஏன், ஆ.ராசா இந்து மதம் குறித்த சர்ச்சை பேச்சுக்களை வைரலாக்கி, நீலகிரியில் கண்டன போராட்டங்களை நடத்தி, அதில் ஓரளவு வெற்றியையும் பாஜக பெற்றிருப்பதை மறுக்க முடியாது.
எப்போதுமே மேற்கு மண்டலங்களை அதிமுகவின் கோட்டை என்று சொல்வார்கள்.. ஆனால், நீலகிரியை மட்டும் அவ்வாறு சொல்ல முடிவதில்லை.. ஊட்டி, குன்னூர் திமுக, காங்கிரசுக்கு சாதகமாக உள்ளன.. ஆனால், கூடலூர் அப்படியில்லை.. பாஜகவும் இங்கு ஸ்டிராங்காகவே உள்ளதால், போட்டி கடுமையாக இருக்கிறது.
திமுக நம்பிக்கை: எனினும், தனக்கான தொகுதியாகவே நீலகிரியை ஆ.ராசா மாற்றி வைத்துள்ளதாகவும், தேர்தலுக்கு முன்னரே நீலகிரியை திமுக தன்னுடைய வசமாக்கியிருப்பதாக பெருத்த நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் அக்கட்சியினர்... ஆக, கடுமையான போட்டிகளையும், விறுவிறு பிரச்சாரங்களையும் தாண்டி, அனலடித்து கொண்டிருக்கிறாள் குளுகுளு மலையரசி..!












Click it and Unblock the Notifications