இது மழையா, என்ன?... எப்படிச் சொல்றதுன்னே தெரியலை பாஸ்!
சென்னை: சென்னை மக்களுக்கு வித்தியாசமான அனுபவம் இது.. மழை வருவது போல மேகம் அவ்வப்போது கூடுகிறது.. ஆனால் கூடிக் கூடி கலைகிறது. திடீரென சொட்டு வைக்கிறது.. அடுத்த விநாடியே வெள்ளை வெயில் வெளுக்கிறது.. கடந்த 2 -3 நாட்களாக நடந்து வரும் கண்ணாமூச்சி விளையாட்டு இது.
கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கியது. தொடங்கிய நாளில் கன்னியாகுமரி, கோவை, தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. கோவையில் நேற்று மாலையில் மழை கொட்டித் தீர்த்தது.

ஆனால் சென்னையில் நேற்று காலை முதலே வானத்தில் ஒரு செம டிராமா அரங்கேறியது...
முதலில் வானம் மப்பும் மந்தாரமுமாக இருப்பது போல காணப்பட்டது. அதன் பின்னர் வெயில் வெளுத்தெடுத்தது. திடீரென காற்று பலமாக வீசியது. சரி மழை எப்படியும் வந்து விடும் என்று மக்கள் நம்பிக்கையோடு இருந்தனர்.
ஆனால் எதுவுமே வரவில்லை. மாறாக புழுக்கம்தான் பிடுங்கித் தின்றது. கண்ணுக்கு இமை பாரமா.. மரத்துக்கு இலை பாரமா என்ற பாடலை மாற்றி உடம்புக்கு டிரஸ் பாரமா என்று புலம்பும் அளவுக்கு புழுக்கம் காட்டுத்தனமாக இருந்தது. அப்படி ஒரு புழுக்கம்.. அப்படி தகிப்பு..
சரி இரவு பெய்யலாமோ என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது. ஆனால் இரவிலும் கூட மழை இல்லை. புழுக்கமும் குறையவில்லை.
இன்று காலை இன்னொரு வித்தியாசமான டிராமாவை காண முடிந்தது. காலையிலேயே மேக மூட்டமாக இருந்தது பல இடங்களில். திடீரென வானம் சொட்டு வைத்தது. அதுவும் எப்படி குற்றாலத்தில் பெய்வது போல சின்னதாக ஒரு சாரல் மழை.. அதை சாரல் என்று கூட கூற முடியாது.. ஏன் தூறல் என்று கூட சொல்ல முடியாது... மாறாக பொடிப் பொடியாக, துளித் துளியாக.. ரொம்ப ரொம்ப குட்டி குட்டியாக சொட்டு வைத்தது வானம்.. ஆனாலும் தரை நனையும் அளவுக்கு அந்த சாரல் இருந்தது.
படிப்படியாக அதுவும் மறைந்து போய் விட்டது. இப்போது வானம் மேக மூட்டாக இருக்கிறது. மழை வந்தால் பிய்த்துத பிரித்து எடுத்து விடும் என்ற ரேஞ்சுக்கு ஒரே குமுறலாக உள்ளது. ஆனாலும் இன்றும் ஏமாற்றமே மிஞ்சும் என்று மக்கள் சற்றே கடுப்பாக காத்திருக்கின்றனர்.
பெய்ய வேண்டியதுதானே .. எதுக்கு இம்புட்டு பில்டப்பு...?!












Click it and Unblock the Notifications