மனிதம் சாகவில்லை.. உணவுக்காக ஏங்கும்போதும், அடுத்தவருக்கு விட்டுக்கொடுத்த சென்னை பெண்!
சென்னை: வெள்ளத்தில் சிக்கி, உணவுக்கு வழியில்லாமல் தவிக்கும் சென்னைவாசிகளுக்கு இந்திய ராணுவம், ஹெலிகாப்டர்கள் மூலம், உணவு பொட்டலத்தை வழங்கி வருகிறது. உணவுக்காக ஏங்கும் நிலையிலும், தங்களுக்கு உணவு பொட்டலம் போதும் என்று கையசைத்த பெண்மணியின் மனித நேயம் பாராட்டத்தக்கதாக உள்ளது.
வெள்ளத்தில் சிக்கிய சென்னைவாசிகளுக்கு உதவி செய்ய, அவர்களை மீட்க, நேற்று ராணுவத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டது. கப்பலில், மீட்பு பணிக்கு தேவையான பொருட்களுடன், இன்று காலை கடற்படையினர் சென்னை துறைமுகத்திற்கு வந்தனர். விமானப்படை சார்பில் 5க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டது.
WATCH: 1 food packet lands on rooftop, woman signals to IAF chopper to not drop more saying its sufficient pic.twitter.com/5d0H0DTY05
— ANI (@ANI_news) December 3, 2015 இதில், இன்று, 2 ஹெலிகாப்டர்கள் மூலம், நகரின் பல பகுதிகளில் ஆய்வு செய்து, எங்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்களோ, அங்கு உணவு பொட்டலங்களை வீசி வருகின்றனர்.
தண்ணீர் சூழ்ந்து, வீடுகள் தனித்தனி தீவுகளாக மாறிவிட்டதால், உணவு கிடைக்காமல் அவதிப்படும், மக்கள், தங்கள் வீடுகளின் மொட்டை மாடிகளில் குவிந்துள்ளனர். அங்கிருந்து ஹெலிகாப்டர்களை நோக்கி கையசைக்கிறார்கள். அவர்களை நோக்கி, உணவு பொட்டலங்களை ராணுவத்தினர் வீசுகின்றனர்.
இப்படி உணவு பொட்டலம் வீசப்படும் ராணுவ ஹெலிகாப்டரில் தொலைக்காட்சி சேனல் பத்திரிகையாளர்கள் சிலரையும் ராணுவத்தினர் உடன் அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் எடுத்த வீடியோவில் ஒரு காட்சி இது.
அந்த மொட்டை மாடியில் ஒரு தம்பதி நின்று ஹெலிகாப்டரை நோக்கி பார்த்தபடியுள்ளனர். அவர்கள் வீட்டுக்கு மேலே சென்று உணவு பொட்டலத்தை ராணுவம் வீசியது. ஒரு பொட்டலம் வீசப்பட்டதும், அதை அந்த தம்பதி எடுத்தது. இதையடுத்து, உடனடியாக, அந்த பெண்மணி, மேலே பார்த்து, 'போதும்.. வேண்டாம்' என்று கையசைக்கிறார். இதை தொடர்ந்து, ஹெலிகாப்டர் அந்த இடத்தில் இருந்து அடுத்த இடம் நோக்கி புறப்படுகிறது.
வீட்டை சுற்றி தண்ணீர் சூழ்ந்துள்ள நிலையிலும், எவ்வளவு முடியுமோ அவ்வளவு உணவை சேகரிக்காமல், பிறருக்கும் கிடைக்கட்டுமே என்று நினைத்து போதும் என கூறிய அந்த சென்னை பெண், மனித நேயம் இன்னும் மடியவில்லை என்பதன் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறார். இந்த வீடியோவை, ஒரு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications