சென்னை மெட்ரோவில், டெல்லியைவிட 250 சதவீதம் அதிக கட்டணம்: கருணாநிதி குற்றச்சாட்டு
சென்னை: தலைநகர் சென்னையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் இயக்கத்திற்கான பயண கட்டணம் மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை மெட்ரோ ரெயில் திட்டம், மாநகரத்தின் மிகப் பெரிய போக்குவரத்துத் திட்டம். 14,600 கோடி ரூபாய்க்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதித் திட்டம். அந்தத் திட்டத்தின் ஒரு கட்டமாக சோதனை ரெயிலைத் துவக்கி வைப்பதற்கே நேரில் சென்ற தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தற்போது அந்தத் திட்டத்தின் தொடக்க விழாவிற்குக் கூட நேரில் செல்லாமல் அதன் மதிப்பைக் குறைப்பதற்காகவே, "வீடியோ கான்பரன்ஸ்" மூலமாகத் தொடங்கி வைத்திருக்கிறார்.

இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசும், மாநில அரசும், சரி சமமாக முதலீடு செய்துள்ளபோதிலும், மரியாதைக்காகக் கூட, மத்திய அரசின் அமைச்சர்கள் யாரையும் இந்தத் தொடக்க விழாவிற்கு அழைத்ததாகத் தெரியவில்லை. மேலும் இந்தத் திட்டம் தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டம் அல்லவா? அதனால் ஆட்சிக்கு வந்தவுடன் மெட்ரோ ரெயில் திட்டத்தைவிட மோனோ ரெயில் திட்டம் தான் சிறந்தது என்று ஜெயலலிதா கூறினார். பின்னர் அவரே மெட்ரோ திட்டத்தை ஏற்றுக் கொண்டார். அதன்பின்னரும் இந்தத் திட்டத்தைத் தொடங்காமல் சில நாட்களைக் கழித்தார்.
மெட்ரோ ரெயில் தொடங்குவதைத் தாமதித்துத் தள்ளிக் கொண்டேபோனால், மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் எனக் கழகப் பொருளாளர், மு.க. ஸ்டாலின் அறிவிப்பு செய்ததற்குப் பிறகு, தற்போது வேறு வழியில்லாமல் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக இவ்வளவு பெரிய திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் அதிருப்தியும், கெட்ட பெயரும் ஏற்பட வேண்டுமென்பதற்காகவே, இதற்கான கட்டணம் அதிக அளவுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பல கட்சிகளின் தலைவர்களும் புகார் கூறியிருக்கிறார்கள். டெல்லியில் மெட்ரோ ரெயில் கட்டணமாக வசூல் செய்வதைப் போல 250 சதவிகித அளவுக்கு இங்கே மிக அதிகமாகக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
பயணம் செய்யும் பொது மக்களின் நலன் கருதித் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில் குறை ஏற்படாத வகையில் உடனடியாக தமிழக அரசும், மெட்ரோ நிறுவனமும் இணைந்து பொது மக்கள் போக்குவரத்துக்காக செலவிடும் சக்தியை அறிந்து, அதற்கேற்ப மெட்ரோ ரெயில் கட்டணங்களைக் குறைத்து அறிவித்திட முன் வரவேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், சென்னை மாநகரில் மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட வேண்டுமென்று முதன் முதலில் குரல் கொடுத்து, அதற்கான பணிகளைத் தொடங்கிய தி.மு. கழக ஆட்சியின் முதல்வர் என்ற முறையில் வலியுறுத்துகிறேன்.












Click it and Unblock the Notifications