போதையில் விபத்து- போலீசிடம் இருந்து தப்பி ஓடி நடிகர் அருண்விஜய் தலைமறைவு- ஆஜராக போலீஸ் கெடு!
சென்னை: குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திவிட்டு போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடி தலைமறைவான நடிகர் அருண்விஜய் நேரில் ஆஜராகி கையெழுத்திட சென்னை போலீசார் கெடு விதித்துள்ளனர்.
சென்னையில் நடிகை ராதிகா மகளின் திருமண வரவேற்பு 2 நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. விடிய விடிய நடந்த பார்ட்டியில் முட்ட முட்ட குடித்திருக்கிறார் அருண்விஜய்.

உச்சகட்ட போதையிலேயே காரை ஓட்டி வந்த அருண்விஜய் நுங்கம்பாக்கம் காவல்நிலையம் அருகே போலீஸ் வேனில் டமாரென மோதினார். போலீசார் அலறியடித்துக் கொண்டு வெளியே வந்து பார்த்தனர்.
அப்போது போதையில் நடிகர் அருண்விஜய் காரை ஓட்டி வந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தி 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
அப்போது நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் இருந்து திடீரென தப்பிவிட்டார் நடிகர் அருண்விஜய். இதுவரை அவர் போலீசாரின் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அருண்விஜய் மீது உடனே ஜாமீன் கிடைக்கக் கூடிய வழக்குதான் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும் 2 நாட்களாக போலீசாருக்கு பயந்து தலைமறைவாக இருந்து வருகிறார் அருண்விஜய். இதனால் இன்று அவர் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று கெடு விதித்துள்ளனர் போலீசார்.
போலீசார் கெடுவிதித்துள்ள நிலையில் வழக்கறிஞர்களுடன் அருண்விஜய் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. போலீசார் உத்தரவை ஏற்று அருண்விஜய் நேரில் ஆஜரானால் உடனே ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications