சென்னை.. 9வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த பெண் ஐடி ஊழியர் வழக்கில் திருப்பம்
Recommended Video

சென்னை: சென்னையில் 9 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த பெண் ஐடி ஊழியர் வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் பிரியங்கா (24). சாப்ட்வேர் இன்ஜினியரான இவர் சென்னை துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
ஆவடியில் தனது தோழிகளுடன் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தபடி தினமும் வேலைக்கு சென்று வந்தார் பிரியங்கா.

9வது மாடியில் இருந்து குதித்தார்
இந்த நிலையில், நேற்று (திங்கள்கிழமை) மாலை பணிமுடிந்ததும், அவர் வேலை பார்த்த அலுவலகக் கட்டடத்தின் 9வது மாடிக்குச் சென்றார். அங்கிருந்து அவர் திடீரென தற்கொலை செய்யும் நோக்கில் கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த பிரியங்கா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து, சிறிது நேரத்தில் இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, பிரியங்காவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

பல கோணங்களில் விசாரணை
பிரியங்கா சடலத்தை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், ஆந்திராவிலுள்ள பிரியாவின் பெற்றோருக்கும் போலீசார் தகவல் கொடுத்தனர். பணிச்சுமை காரணமா, காதல் பிரச்சினை இருந்ததா, குடும்ப பிரச்சினை இருந்ததா என்பது போன்ற பல்வேறு வகையான கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மாப்பிள்ளை பிடிக்கவில்லை
விசாரணையில், புது தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, பிரியங்காவிற்கு அவரது வீட்டில் திருமணத்திற்காக மாப்பிள்ளை பார்த்ததாகவும், அது பிடிக்காமல் பெற்றோருடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு நடைபெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில்தான் பிரியங்கா தற்கொலை செய்துகொண்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடரும் சம்பவங்கள்
பெங்களூர் ஒயிட்பீல்டு அருகே ஐடி ஊழியர் ஒருவர் இதேபோல பணி செய்யும் அலுவலக மாடியில் இருந்து குதித்து சில வாரங்கள் முன்பாக தற்கொலை செய்திருந்தார். இப்போது, சென்னையிலும் அதேபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது ஐடி ஊழியர்கள் நடுவே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications