மரணத்தில் முடிந்த மாணவர்கள் தகராறு: ஆசிரியர்கள் அஜாக்கிரதை காரணமா?
நிலகோட்டை: திண்டுக்கல் மாவட்டம், நிலகோட்டை அருகே விளாம்பட்டியில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் தகராறு மரணத்தில் முடிந்துள்ள சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி மாணவர்கள்தான் கத்தி, அரிவாள் என வெட்டு குத்து நடத்திய நிலையில் பள்ளி மாணவர்களே முன்விரோதத்தை வளர்த்துக்கொண்டு அடிதடி தகராறுவரை சென்றுள்ளனர். இதனால் ஒரு உயிரும் பறிபோயுள்ளது என்பதுதான் சோகம்.
மாணவர்கள் தகராறுக்கும், உயிரிழப்புக்கும் ஆசிரியர்களின் அஜாக்கிரதையே காரணம் என்று பெற்றோர்களும், உறவினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

முன்விரோதம் காரணமா
விளாம்பட்டியில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் எத்திலோடு காலனியை சேர்ந்த ஆசையன் மகன் வினோத் (16) பிளஸ் 1 படித்து வந்தான். இதே வகுப்பில் விளாம்பட்டி, முத்தாலபுரத்தை சேர்ந்த சுந்தரபாண்டியன் என்ற மாணவன் படித்து வருகிறான்.
முதலில் நண்பர்களாக இருந்த இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படவே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 10ஆம் தேதி பள்ளி வளாகத்திலேயே ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போதே ஆசிரியர்கள் அழைத்து கண்டித்து இருந்தால் நேற்றைய தினம் தகராறு வந்திருக்க வாய்ப்பு இல்லை என்கின்றனர் சக மாணவர்கள்.

அடிதடி தகராறு
புதன்கிழமையன்று பள்ளி இடைவேளையில் வகுப்பறையை விட்டு வெளியே வந்தபோது, வினோத் கழுத்தின் பின்புறம் சுந்தரபாண்டியன் தாக்கியதாக தெரிகிறது. இதில் வாயில் நுரை தள்ளிய நிலையில், வினோத் சுருண்டு விழுந்து விட்டான். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் உடனடியாக ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்கவே அவர்கள் மயங்கிய மாணவனை வகுப்பறைக்கு தூக்கி சென்றனர். அவனது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்து வரவழைத்தனர்.

கதறியழுத பெற்றோர்
வினோத்தை ஆட்டோவில் ஏற்றி, அருகில் இருந்த தனியார் ஓமியோபதி கிளினிக்கிற்கு, ஆசிரியர்கள் கொண்டு சென்றனர். அவர்களுடன் வினோத்தின் தந்தை, அதே பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் வினோத்தின் தம்பி ஆகியோரும், உடன் சென்றனர். வினோத்தை பரிசோதித்த டாக்டர், அவர் இறந்து விட்டதாக கூறவே மாணவனின் தந்தையும், தம்பியும் கதறியழுதனர்.
இதையடுத்து, அதே ஆட்டோவில், விளாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர். போலீசார், நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு, வினோத்தின் உடலை கொண்டு சென்றனர். டாக்டர் நவாஸ், பிரேத பரிசோதனை நடத்தினார்.

ஆசிரியர்கள் அஜாக்கிரதை
இதையடுத்து வினோத்தின் உறவினர்கள் நிலகோட்டை அரசு மருத்துவமனை முன் குவிந்தனர். அவர்கள் பள்ளி ஆசிரியர்களின் அஜாக்கிரதையே மாணவர்கள் மோதலுக்கும் உயிரிழப்புக்கும் காரணம் என குற்றம் சாட்டினர்.

போலீஸ் ஆக ஆசைப்பட்டான்
'இந்த ஆண்டு தான் இப்பள்ளியில் சேர்த்தேன். போலீசாக பணியாற்ற வேண்டும் என கூறிக் கொண்டே இருப்பான். அதையே குறிக்கோளாக வைத்திருந்ததால், எந்த பிரச்னைக்கும் செல்ல மாட்டான். ஆசிரியர்கள் கண்காணித்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது,'' என்று கூறி கதறி அழுதார் வினோத்தின் தந்தை.

மாணவன் கைது
மாணவன் இறந்ததால் பள்ளிக்கு உடனடியாக விடுமுறை விடப்பட்டது. இதுகுறித்து விளாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவன் சுந்தரபாண்டியனை கைது செய்தனர். மேலும் நிலகோட்டை தாசில்தார் மோகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷிணி, மாவட்ட கல்வி அலுவலர் மாலா மணிமேகலை ஆகியோர் பள்ளியில் விசாரணை நடத்தினர். முன்விரோத தகராறில் பள்ளியிலேயே மாணவனை, சக மாணவன் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்ன நடந்த்து?
நோட்டு கிழிந்தது தொடர்பாக சண்டை போட்டதில், வினோத்தை கழுத்தில் குத்தினேன்; அவன் மயங்கி விழுந்து விட்டான். அதன் பின்பு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது,'' என்று கூறியுள்ளான் மாணவன் உயிரிழக்க காரணமான சுந்தரபாண்டியன்.

சரியில்லாத தலைமை
இரண்டு ஆண்டுகளுக்கு முன், இதே பள்ளியில் கம்ப்யூட்டர் திருடு போனது தொடர்பாக, மாணவரை போலீசார் விசாரித்தபோது, அம்மாணவர் அதை அவமானமாகக் கருதி பள்ளியிலேயே தீக்குளித்தார். அதன் பின், இப்பள்ளி மாணவர்களால் ஆவரம்பட்டி -நாட்டார்பட்டி கிராமத்திற்கும், விளாம்பட்டி -சொக்குபிள்ளைபட்டி கிராமத்திற்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. முன்பிருந்த தலைமை ஆசிரியர், சரியாக பள்ளிக்கு வந்ததே இல்லை. இதனால், பள்ளியில் கண்காணிப்பு இல்லாமல் மாணவர்கள் திரிந்து கொண்டிருந்தனர். ஆசிரியர்கள் பற்றாக்குறையும் உள்ளது என்பது பெற்றோர்களின் குற்றச்சாட்டாகும்.

தலைமையாசியர் சொல்வது என்ன?
இச்சம்பவம் வேதனையளிப்பதாக உள்ளது,'' என்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்பிரமணி. நான் இப்பள்ளிக்கு வந்து மூன்று மாதங்கள் தான் ஆகிறது. பள்ளி இடைவேளையில் சம்பவம் நடந்துள்ளது. தகவல் கிடைத்ததும் மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றோம். ஆனால், மாணவன் இறந்து விட்டதாக டாக்டர் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திட்ட கூட முடியலையே
பள்ளியில் படிக்கும் மாணவர்களை சத்தம் போட்டு திட்டக் கூட வழியில்லை. அந்தளவிற்கு, சட்டங்களும், விதிகளும், மாணவர்களுக்கு சாதமாக இருக்கின்றன. மாணவர்களை, கண்டிக்கவும், தண்டிக்கவும், உரிய அதிகாரம், ஆசிரியர்களுக்கு தர வேண்டும். ஆசிரியர்களின் கைகளை கட்டிவிட்டால், நாங்கள் என்ன செய்ய முடியும் என்பது அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க பொதுச் செயலர், சாமி சத்தியமூர்த்தியின் ஆதங்கமாகும்.

போதை பழக்கம்
பள்ளிகளுக்கு, மாணவர்கள் மொபைல் போன் கொண்டு வருகின்றனர்; சிலர், போதைப்பொருள் கொண்டு வருகின்றனர். ஏதாவது கேட்டால், சமூக ரீதியான பிரச்னைகள் வந்து விடுகின்றன. மாணவர்களை தண்டிக்கவும், திருத்தவும்,சட்ட பூர்வமாக, ஆசிரியர்களுக்கு அதிகாரம் வழங்கினால், பெருகி வரும் வன்முறை சம்பவங்களை, ஓரளவு கட்டுப்படுத்தலாம் என்றும் சாமி சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.

பெற்றோர்கள் அரவணைப்பு
படிக்கும் வயதில் வன்முறை எண்ணம் தலைதுாக்க, வன்முறை நிறைந்த இன்றைய சினிமாக்களும் காரணம் என்கின்றனர் மனநல மருத்துவர்கள். குடியிருக்கும் பகுதி, குழந்தைகள் பழகும் நண்பர்கள் சரியானவராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், வன்முறை எண்ணம் தலைதுாக்க வாய்ப்புண்டு. பெற்றோர்தான் அதீத கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

உயிர் போச்சே
ஆசிரியர்கள் கண்காணிப்பு இல்லை என்று பெற்றோர்கள் ஒருபுறம் குற்றம்சாட்ட, எங்கள் கை கட்டை அவிழ்த்து விடுங்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று ஆசிரியர்கள் கேட்கின்றனர். ஒடித்து வளர்க்காத காட்டு மரங்களாய் இன்றைக்கு மாணவர்கள் திரிவதால்தான் அவர்களின் அராஜகமும் அதிகரித்து வருகிறது. அரசு நடவடிக்கை எடுக்குமா?












Click it and Unblock the Notifications