தமிழகத்தில் டெங்குவிற்கு 400 பேர் வரை மரணம்... அரசு மூடி மறைப்பு - ஸ்டாலின்
டெங்கு உயிரிழப்பு குறித்து பொய்யான தகவல்களை கூறி அரசு மூடி மறைக்க முயல்கிறது என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் தினமும் 10 பேர் டெங்குவிற்கு மரணமடைகின்றனர். இதுவரை 400 பேர் காய்ச்சலுக்கு மரணமடைந்துள்ளதாக திமுக செயல்தலைவரும், சட்டசபை எதிர்கட்சித்தலைவருமான ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
மழைக்காலம் தொடங்கியுள்ளதால் ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழைநீர், இருப்பிடங்கள், பொது இடங்கள் தூய்மையாக இல்லாதது போன்ற காரணங்களால் அனைத்து பகுதிகளிலும் காய்ச்சல் பரவி வருகிறது.
மர்ம காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சல்கள் பரவி வருகின்றன. தினசரியும் சிலர் காய்ச்சலுக்கு உயிரிழந்து வருகின்றனர். இது மக்களை பீதிக்கு ஆளாக்கியுள்ளது.

ஸ்டாலின் ஆய்வு
எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சென்னை பெரம்பூர் சென் மருத்துவமனையில் ஆய்வு செய்த அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.

டெங்கு மரணங்கள் அதிகரிப்பு
செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், டெங்கு காய்ச்சலால் இதுவரை 23 பேர்தான் உயிரிழந்துள்ளதாக அரசு தவறான தகவல்களை தெரிவித்துள்ளது. டெங்கு உயிரிழப்பு குறித்து பொய்யான தகவல்களை கூறி அரசு மூடி மறைக்க முயல்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.

டெங்கு பலி அதிகரிப்பு
தினசரியும் டெங்குவிற்கு 10 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 400 பேர் டெங்குவிற்கு மரணமடைந்துள்ளனர்.
டெங்குவை முன்கூட்டியே வராமல் தடுக்கும் முயற்சியில் அதிமுக அரசு ஈடுபடவில்லை. வருமுன் தடுக்காமல் வந்த பின்னர் விழிப்புணர்வு ஏற்படுத்துவதனால் பயனில்லை.

ஊழல் அரசு
வாக்கி டாக்கி வாங்கியதில் காவல்துறை ரூ.88 கோடி முறைகேடு செய்ததாக உள்துறை செயலரே டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார். குட்கா ஊழல்போல வாக்கி டாக்கி வாங்கியதிலும் முறைகேடு நடந்துள்ளது.

அவரைப் போல இவரும்
முந்தைய ஆளுநர் செயல்படாத ஆளுநர்தான். அவரைப் போல தமிழகத்திற்கு வர இருக்கும் புதிய ஆளுநரும் செயல்பட மாட்டார் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications