Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்டா மாவட்டங்களில் விவசாயத்திற்கு 12 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கப்படும்: ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்டா மாவட்டங்களில் விவசாயத்திற்கு 12 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி, வேளாண் உற்பத்தியைப் பெருக்கி, விவசாயிகளின் வாழ்வில் வளம் ஏற்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் எனது அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே தான் கடந்த மைனாரிட்டி தி.மு.க ஆட்சியில் மிக அதிக அளவு உணவு தானிய உற்பத்தி என்பது 2006-07-ஆம் ஆண்டில் 82.63 லட்சம் மெட்ரிக் டன் என இருந்த நிலை மாறி 2011-12 ஆம் ஆண்டில் 101.52 லட்சம் மெட்ரிக் டன்; 2013-14 ஆம் ஆண்டில் 110.02 லட்சம் மெட்ரிக் டன்; 2014-15 ஆம் ஆண்டில் 122.86 லட்சம் மெட்ரிக் டன் என்று, ஆண்டு தோறும் புதிய சாதனைகளை எனது தலைமையிலான அரசு படைத்து வருகிறது.

Delta areas will get 12 hours power for agriculture: Jaya

தரமான இடுபொருட்களை விவசாயிகளுக்கு வழங்குவது; புதிய விவசாய உத்திகள் கையாளப்படுவது; விவசாயத்தில் எந்திரமயமாக்கலை ஊக்குவிப்பது; விவசாயிகளுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்குவது; போதிய மழை மற்றும் நீர் வரத்து இல்லாத காலங்களிலும் விவசாயம் மேற்கொள்வதை ஊக்குவிப்பது ஆகியவையே இந்தச் சாதனைக்கு காரணமாகும். அந்த வகையில் நடப்பாண்டில் டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி குறித்த ஆய்வுக் கூட்டம் 2.6.2015 அன்று எனது தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன், வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், நெடுஞ்சாலைகள், சிறுதுறைமுகங்கள் மற்றும் வனத்துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி, உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், தமிழ்நாடு அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், நிதித் துறை முதன்மைச் செயலாளர் சண்முகம், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் பழனியப்பன், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர் ராஜேஷ் லக்கானி, வேளாண்மைத் துறை இயக்குநர் ராஜேந்திரன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் குறித்தும், தற்போதுள்ள சூழ்நிலையில் அதிக பரப்பில் குறுவை சாகுபடியை மேற்கொள்வது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. மேட்டூர் அணையின் முழுக்கொள்ளளவான 120 அடியில் குறைந்த பட்சம் 90 அடி தண்ணீர் இருக்கும் போது குறுவை நெல் சாகுபடிக்காக ஜுன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 72.64 அடியாகவும், நீர் வரத்து வினாடிக்கு 7,058 கன அடியாகவும் உள்ளது. காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி 10 டி.எம்.சி. அடி தண்ணீரை கர்நாடகம் தமிழகத்திற்கு ஜுன் மாதத்தில் தர வேண்டும். காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் கிடைத்தாலும் மேட்டூர் அணையில் ஜுன் இறுதியில் 79 அடி மட்டுமே தண்ணீர் இருக்கும். எனவே, இந்த நிலையில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை திறந்துவிட இயலாது.

Delta areas will get 12 hours power for agriculture: Jaya

மாநில அளவில் கோடைப்பருவத்தில் சராசரி மழை அளவான 128 மில்லி மீட்டருக்குப் பதில் நடப்பாண்டில் 241.3 மில்லி மீட்டர் மழை கிடைத்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் குறுவை சாகுபடியை டெல்டா விவசாயிகள் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் கீழ்க்காணும் குறுவை தொகுப்பு உதவியை வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன். இதன்படி,

1. கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கியது போல் இந்த ஆண்டும் டெல்டா மாவட்டங்களில் விவசாயத்திற்கு 12 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.

2. டெல்டா பகுதிகளில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி அதிக பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்வதற்கான முயற்சிகளை எனது தலைமையிலான அரசு எடுக்கும். நெல் நடவுப் பணிகளையும், களைக் கட்டுப்பாட்டுப் பணிகளையும் உரிய காலத்தே மேற்கொள்ளவும்; பயிர் எண்ணிக்கையை பராமரித்து, குறைந்த நீரில் அதிக பரப்பளவில் திருந்திய நெல் சாகுபடி முறையினை பின்பற்றி மகசூலை உயர்த்தும் வகையில், நடவு இயந்திரம் மூலம் நெல் நடவுப்பணியை மேற்கொள்ள டெல்டா விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்கள். தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வேளாண் பொறியியல் துறை மூலம் நடவு இயந்திரங்கள் வாடகைக்குப் பெறப்பட்டு, தேவையின் அடிப்படையில் விவசாயிகளின் வயல்களில் நடவுப்பணி மேற்கொள்ளப்படும். இதற்கு விவசாயிகள் எவ்வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. இதற்கென அரசுக்கு 25 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.

3. தற்போது, டெல்டா பகுதியில் மேற்கொள்ளப்படும் குறுவை சாகுபடியின் மகசூலை உயர்த்தும் வகையில் நெல் நுண்ணூட்டக் கலவை மற்றும் உயிர் உரங்கள் ஆகியவற்றை விவசாயிகள் பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையில் ஏக்கர் ஒன்றுக்கு 315 ரூபாய் வீதம் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதனால் அரசுக்கு
7 கோடியே 87 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படும்.

4. மண்ணின் தரத்திற்கு ஏற்ப பயிர்களுக்கு உரம் இடப்பட வேண்டியது அவசியமாகும். வேளாண் உற்பத்தியினை அதிகரிக்கும் ஒரு உத்தியாக மாநிலம் முழுவதும் மண் பரிசோதனை செய்யப்பட்டு விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த கையேடு 67.46 லட்சம் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. இந்த மண் பரிசோதனை ஆய்வின் அடிப்படையில், டெல்டா பகுதிகளில் சுமார் 50,000 ஏக்கர் பரப்பில் மண் வளம் மேம்படுத்தப்பட வேண்டும். இதற்கான ஜிப்சம், விவசாயத் துறை மூலம் விவசாயிகளுக்கு விலை ஏதுமின்றி வழங்கப்படும். இதற்காக அரசுக்கு 3 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.

5. காவேரி டெல்டாவின் கடைமடைப் பகுதியான வெண்ணாறு பகுதியில், நிலத்தடி உவர் நீர் பாதிப்பால் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ள இயலாத சூழ்நிலை உள்ளது. இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவிடும் வகையில் ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்த நான் உத்தரவிட்டுள்ளேன். இதன்படி மண்ணின் ஈரப்பதத்தைக் கொண்டு, உழவு மேற்கொண்டு, குறுகிய கால பயிர்களான பயறு வகைகள் அல்லது பசுந்தாள் உரப்பயிர்களை தொகுப்பு கிராம அணுகுமுறையில் சாகுபடி செய்ய விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்கள். இதற்காக வேளாண் பொறியியல் துறை மூலம் இப்பகுதிகளில், உழவுப்பணி மேற்கொள்ளப்படுவதோடு, குறுகிய கால பயறு வகைகள் அல்லது பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்ய தேவையான விதைகள் விலையில்லாமல் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதற்காக அரசுக்கு 5 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். இதன் மூலம் மண் வளம் மேம்படுவதோடு வெண்ணாறு கடைமடைப் பகுதியில் சம்பாப் பருவ நெல் உற்பத்தியும் அதிகரிக்கும்.

தற்போது நான் அறிவித்துள்ள குறுவை தொகுப்பு உதவித் திட்டத்திற்காக அரசுக்கு 40 கோடியே 97 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படும். இந்த குறுவை தொகுப்பு உதவி திட்டத்தினால் டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர் மூலம் விவசாயிகள் கூடுதல் பரப்பில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளவும், உயர் மகசூல் பெறவும், மண் வளம் மேம்படவும் வழிவகை ஏற்படும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+