முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 4 அமைச்சர்களை தகுதியிழப்பு செய்யக்கோரி வழக்கு- ஏப்.11க்கு ஒத்திவைப்பு
முதல்வர், அமைச்சர்களை தகுதியிழப்பு செய்யக்கோரி தொடரப்பப்பட்ட வழக்கு ஏப்ரல் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை: சசிகலாவை சிறையில் சந்தித்து பேசிய 4 அமைச்சர்களையும், அவர்களுக்கு அனுமதி கொடுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி ஆணழகன் என்பவர் தொடர்ந்த வழக்கை ஏப்ரல் 11ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்துள்ளது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ தாமரைக்கனியின் மகன் டி.ஆணழகன், இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று தாக்கல் செய்த பொதுநலன் மனு:
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவனையில் சேர்க்கப்பட்டு கடந்த டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். அதன்பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார்.

சசிகலா நிர்பந்தம்
அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வானதும், அவரை முதல்வராக்கும் நோக்கத்துடன் பன்னீர் செல்வத்தை பதவி விலகுமாறு நிர்ப்பந்தப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

சிறையில் சசிகலா
இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதால், எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். முதல்வரும், அமைச்சர்களும் பதவியேற்றபோது அரசியலமைப்பு சட்டப்படி ரகசிய காப்பு பிரமாணம் எடுத்துக்கொண்டனர். அதன்படி அரசின் ரகசியங்களை முதல்வரோ, அமைச்சர்களோ வெளியே யாருக்கும் தெரிவிக்கக் கூடாது. ஆனால், அதிமுக செய்தித் தொடர்பாளர் கவுரிசங்கர், அதிமுக அரசு சசிகலாவின் ஆலோசனை, உத்தரவின் பேரில் நடைபெறுவதாக தெரிவித்தார்.

அமைச்சர்கள் சந்திப்பு
இதனை முதல்வரோ, அமைச்சர்களோ மறுக்கவில்லை. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் கே.ராஜூ, திண்டுக்கல் சி.சீனிவாசன், ஆர்.காமராஜ் ஆகி யோர் பெங்களூரு சிறைக்குச் சென்று சசிகலாவை சந்தித்தனர். அப்போது அரசின் செயல்பாடுகள் குறித்து சசிகலாவுடன். விவாதித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

மீறிய அமைச்சர்கள்
இது அவர்கள் பதவியேற்கும் போது எடுத்த ரகசிய காப்பு பிரமாணத்தை மீறியதாகும். இவர்கள் அரசின் ரகசியத்தை சசிகலாவுக்கு தெரிவிப்பவர்களாக உள்ளனர். எனவே முதல்வர் மற்றும் 4 அமைச்சர்களை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதியிழப்பு செய்ய வேண்டும்.

தகுதியிழப்பு செய்க
இது தொடர்பாக தமிழக ஆளுநருக்கு மின்னஞ்சல் மற்றும் தபாலில் 13.3.2017, 16.3.2017-ல் மனு அனுப்பினேன். இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே, எனது மனு அடிப்படையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் 4 அமைச்சர்களை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதியிழப்பு செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை ஏப்ரல் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தினர்.












Click it and Unblock the Notifications