தடையை மீறி ஜல்லிக்கட்டு.. போராட்டக்காரர்களுக்கு தடியடி.. கி. வீரமணி கடும் கண்டனம்
தமிழகம் முழுவதும் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவத்திற்கு கி.வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: பொங்கல் திருவிழாவில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. இதனைக் கட்டுக்குள் கொண்டு வர போலீசார் பல இடங்களில் தடியடி நடத்திகர். இதற்கு திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
'ஏறு தழுவுதல்' என்ற நமது திராவிடர் தமிழர் - பண்பாட்டுத் திருவிழாவின் ஒரு பகுதியை - திட்டமிட்டே நமது பண்பாட்டு அடையாளச் சின்னங்களை அழித்தொழிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இதனை (ஜல்லிக்கட்டு) தடை செய்து உச்சநீதிமன்றம் கூறியுள்ளதை மாற்றிட - மறு பார்வை சீராய்வு மனு செய்தல் அவசியம் - தேவை.

மிருக வதை அல்ல
இது மிருக வதை அல்ல; மாறாக அவைகளைப் பாதுகாத்து, வளர்ச்சி அடையச் செய்யும் ஒரு கோலாகலக் கொண்டாட்டம் என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்குத் தெரியப்படுத்தும் வகையில் போதிய முயற்சிகளை மத்திய - மாநில அரசுகள் சரிவர செய்யவில்லை.

தேவையற்ற தடியடிகள்!
அதுதான் மூலகாரணம்; இந்நிலையில், இளைஞர்கள், மாணவர்கள், கட்சி, அரசியல் சாராதவர் பல்லாயிரக்கணக்கில் அணி திரண்டுள்ளனர். தடையை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாமே தவிர, தேவையற்ற தடியடி நடத்துவது சரியான அணுகுமுறையல்ல.

விரும்பத்தகாத செயல்
இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். ‘கடிதோச்சி மெல்ல எறிக' என்ற வள்ளுவர் குறளின் அணுகுமுறையினை பற்பல தருணங்களில் காவல்துறையினர் பின்பற்றாததினால்தான் இத்தகைய விரும்பத்தகாத மக்கள் விரோத நடவடிக்கைகளை நமது காவல்துறையினர் செய்கின்றனர். ஆட்சியாளர் இதை ஒரு சட்டம் - ஒழுங்குப் பிரச்சினையாகக் கருதி நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகாது.

பண்பாட்டு அடித்தளம்!
எனவே, தடியடி போன்றவைகளை உடனடியாக நிறுத்தி, மக்களின் உணர்வுகளுக்கும் தலை வணங்கவேண்டும். அதனைப் பயன்படுத்தி தங்களது கோரிக்கையில் வெற்றி அடைய முயற்சிப்பதுதான் தமிழக அரசுக்கு புத்திசாலித்தனமானதே தவிர, இதன் பின்னால் உள்ள பண்பாட்டுப் பாதுகாப்பு உணர்வின் அடி நீரோட்ட வலிமையைப் புரிந்துகொள்ளவேண்டாமா? என்று கி.வீரமணி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications