16 தொகுதிகளில் 11ஐக் கைப்பற்றியது திமுக... சென்னை மீண்டும் திமுகவின் கோட்டையாகிறது!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுகவின் கோட்டையாக சென்னை மாறுகிறது தமிழகம் முழுவதும் திமுக பரவலாக தோல்வியை சந்தித்திருந்தாலும்
சென்னையில் மொத்தம் உள்ள 16 தொகுதிகளில் 11 தொகுதிகளில் திமுக வெல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதிமுக, அண்ணாநகர், வேளச்சேரி, கொளத்தூர், சைதாப்பேட்டை, சேப்பாக்கம், பெரம்பூர், வில்லிவாக்கம், திருவிகநகர், துறைமுகம், ஆயிரம்விளக்கு உள்ளிட்ட 11 தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது. இதனால் சென்னை மீண்டும் திமுகவின் கோட்டையாகிறது.

ஒரு காலத்தில், சென்னை மாவட்டம், திமுக வின் அசைக்க முடியாத கோட்டை. அதனால், சென்னை தொகுதிகளில் போட்டியிட தயங்கும் அதிமுக பெரும்பாலான தொகுதிகளை, கூட்டணி கட்சிகளுக்கு தள்ளிவிடுவது வழக்கம்.
கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், இந்த நிலைமை மாறியது. அந்த தேர்தலில் கொளத்துார், திருவல்லிக்கேணி தொகுதியில் மட்டுமே திமுகவினால் வெற்றி பெற முடிந்தது. மீதமுள்ள 14 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது.
2011 சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடித்தது; எதிர்க்கட்சி அந்தஸ்தை, திமுக இழந்தது வரலாறு.
2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், அதிமுக தனித்து போட்டியிட்டு, 39ல், 37தொகுதிகளையும் கைப்பற்றி சாதனை படைத்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள எம்.எல்.ஏ, எம்.பி., தொகுதிகளை கைப்பற்றியதன் மூலம், அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக, சென்னை மாறியது.
ஆனால், 2015 டிசம்பரில் கொட்டி தீர்த்த மழையும், செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் ஏற்பட்ட வெள்ளமும், ஐந்து ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட அதிமுக கோட்டை என்ற இமேஜை ஆட்டி பார்த்து விட்டது.
இதனை பயன்படுத்தி, விட்ட கோட்டையை பிடிக்க,திமுக முயற்சி செய்தது. ஊடகங்களிலும், செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறக்கப்பட்டதற்குக் காரணம் அதிமுக அரசுதான் என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. எதிர்பார்த்தது போலவே சென்னையை திமுக மீண்டும் தனது வசமாக்கிக் கொண்டது.
தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் 234 தொகுதிகளில் அதிமுக அதிக தொகுதிகளில் முன்னிலை வகுத்தாலும், சென்னையை பொருத்தவரை மொத்தம் உள்ள 16 தொகுதிகளில் 11 தொகுதிகளில் திமுக முன்னிலையில் இருந்தது. அதிமுக 5 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் இருந்தது.
இதில் எழும்பூர், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, அண்ணாநகர் ஆகிய தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தி.நகர் தொகுதியில் அதிமுகவின் சத்திய நாராயணன் வெற்றி பெற்றுள்ளார்.
அதிமுக மயிலாப்பூர், ஆர்.கே.நகர், விருகம்பாக்கம், ராயபுரம் ஆகிய தொகுதிகளில் அதிமுக முன்னணியில் உள்ளது. ஓட்டுக்கள் இன்னமும் எண்ணப்பட்டு வருகின்றன. மாலைக்குள் முடிவுகள் தெரியவரும்.












Click it and Unblock the Notifications