கருவில் இருக்கும் குழந்தைக்கும் இன்ஷுரன்ஸ்: இதுவும் திமுக தேர்தல் அறிக்கையில்..
சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் கருவில் இருக்கும் குழந்தைக்கும் இன்ஷுரன்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையில் தமிழக மக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்கும் வகையில் பல அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. தெருவுக்கு தெரு இருக்கும் டாஸ்மாக் கடைகளை பார்க்கும்போது எல்லாம் பெண்களுக்கு கோபம் பொங்கிக் கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சங்கள்:

மதுவிலக்கு
பூரண மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் இயற்றப்படும். இதனால் ஏற்படும் வருவாயை சரிசெய்ய புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுவால் பல பெண்கள் கணவன்மார்களை பறிகொடுத்துவிட்டு விதவைகளாக நிற்கிறார்கள். இந்நிலையில் மதுவிலக்கு அமலுக்கு வந்தால் பெண்கள் மனம் குளிரும்.

இன்ஷுரன்ஸ்
உயிரோடு இருக்கும் மக்களுக்கே பலர் முக்கியத்துவம் அளிக்காத நிலையில் திமுக தேர்தல் அறிக்கையில் கருவில் இருக்கும் குழந்தைக்கும் இன்ஷுரன்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளது தாய்மார்களை நெகிழ வைத்துள்ளது.

விவசாயிகள்
மழை இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமலும், வங்கிக் கடனை திருப்பிக் கொடுக்க முடியாமலும் விவசாயிகள் திணறிக் கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆறுதலாக உள்ளது. மேலும் விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தெரிவித்துள்ளது.

லோக் ஆயுக்தா
தமிழகத்தில் ஊழல் அதிகரித்துவிட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க, லோக் ஆயுக்தா சட்ட அமைப்பு உருவாக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள்
கடலை நம்பி பிழைப்பு நடத்தும் மீனவர்கள் பலர் இருக்க இடம் இல்லாமல் அல்லாடுகையில் அவர்களுக்கு 5 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என கருணாநிதி வாக்குறுதி அளித்துள்ளார். மீன்படி தடை கால நிவாரணம் ரூ.5 ஆயிரமாக வழங்கப்படும் என்றும், மீனவர்களை எஸ்.டி. பட்டியலில் சேர்க்க வலியுறுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கல்விக் கடன்
கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கருணாநிதி அறிவித்துள்ளது மாணவ, மாணவியருக்கு நம்பிக்கை அளித்துள்ளது. படித்துவிட்டு பலர் வேலை இல்லாமல் இருக்கையில் சுயதொழில் தொடங்க ஒரு லட்சம் பட்டதாரிகளுக்கு ரூ.1 லட்சம் வரை கடன் மானியம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார் கருணாநிதி. இது நடந்தால் பல பட்டதாரிகள் அவரை மனதார வாழ்த்துவார்கள்.

பேறுகாலம்
அரசுப் பணியில் உள்ள பெண்களுக்கு பேறுகால விடுமுறை 9 மாதங்களாக உயர்வு. திருமண உதவித்தொகை ரூ.60 ஆயிரமாக உயர்வு என திமுக தேர்தல் அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க ஆகும் செலவை நினைத்து ஏழை பெற்றோர்கள் கதிகலங்கி நிற்கும் வேளையில் இந்த அறிவிப்பு ஆறுதலாக உள்ளது.

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா பந்தயம் நடைபெற நடவடிக்கை என கருணாநிதி வாக்குறுதி அளித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications