அண்ணாமலைக்கு எதிராக ஆக்டிவ் மோட்.. திரும்பிய திமுகவின் பார்வை.. நாங்குநேரி விஷயத்தை கவனித்தீர்களா?
நெல்லை: நாங்குநேரி மாணவரை வெட்டிய மாணவரின் தந்தை பாஜக உறுப்பினர் என்று நெல்லை திமுகவினர் பதிலடி கொடுத்துள்ளனர். திமுகவினர் முன்பைவிட இப்போது அண்ணாமலைக்கு கடும் பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளனர். ஆனால் அண்ணாமலைக்கு திமுக தலைமையிடம் இருந்து இல்லாமல் மாவட்ட அளவிலான நிர்வாகிகளை வைத்தே பதிலடி கொடுக்கப்படுகிறது
ஆதாரமில்லாத தகவலை வெளியிடுவது பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அழகல்ல என்று கூறியுள்ள ஆவுடையப்பன், நாங்குநேரி பள்ளி மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு காரணமானவர்கள் திமுகவை சேர்ந்தவர்கள் என, பொய்யான குற்றச்சாட்டை அண்ணாமலை தெரிவித்துள்ளதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆவுடையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " நாங்குநேரி பள்ளி மாணவர்கள் மோதல் சம்பவத்துக்கு திமுக-வை சேர்ந்தவர்கள் தான் காரணம் என பொய்யான குற்றச்சாட்டை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். காவல்துறையால் கைது செய்யப்பட்ட மாணவரின் தந்தை பாஜக உறுப்பினர் ஆவார். அவர், நாங்குநேரி வார்டு தலைவராக இருந்துள்ளார்.
பாஜக முன்னணி தலைவரிடம் நெருங்கி பழகியுள்ளார். இது அப்பகுதி மக்கள் அனைவருக்கும் தெரியும். இதையெல்லாம் மறைத்துவிட்டு திமுகவுக்கும், திமுக நிர்வாகிகளின் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் பொய்யான தகவலை அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
கைதான மாணவரின் தந்தை முன்னாள் அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்த புகைப்படம், பாஜக உறுப்பினர் அட்டை புகைப்படம் ஆகியவை உள்ளது. இதையெல்லாம் அண்ணாமலை மறைத்து திமுக மீது அவதூறு பரப்புவது அருவருக்கத்தக்க செயலாகும்" இவ்வாறு ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த 12 ஆம் தேதி அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், "நாங்குநேரியில் பள்ளி மாணவர்களிடையே ஜாதியப் பிரச்சினைகள் காரணமாக, பன்னிரண்டாவது வகுப்பு படிக்கும் பட்டியல் சமூக மாணவர் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி இருவரும், சக பள்ளி மாணவர்களால் வெட்டப்பட்டுள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. பள்ளி மாணவர்களிடையே ஜாதிய வேறுபாடுகள் அதிகரித்து வருவதும், ஆயுதங்கள் கொண்டு தாக்குவதும், எதிர்கால சமூகத்தை நினைத்து அச்சம் கொள்ள வைக்கிறது. மாணவர் சின்னதுரை, நன்றாகப் படிக்கும் மாணவர் என்றும், ஆசிரியர்களிடம் நன்மதிப்பு பெற்றவர் என்றும் அறிகிறேன். சிறந்த மாணவராக வருங்காலத்தில், சமூகத்தில் உயர்ந்த பொறுப்பில் வரும் வாய்ப்புள்ள மாணவர் ஒருவர். ஜாதிய வன்முறையால் முடக்கப்படுவதை சிறிதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்தக் கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீதும், இதன் பின்னணியில் இருப்பவர்கள் அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன். அற்ப அரசியல் லாபங்களுக்காக வேறு வேறு சமூகங்களிடையே ஜாதி வெறியைத் தூண்டி, அதன் மூலம் ஆண்டாண்டு காலமாகப் பலனடைந்து வரும் கட்சி, திமுக என்பதை அனைவரும் அறிவர்.

இந்த சம்பவத்திலும், திமுக கட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்றும், அவர்கள் காவல்துறையை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளிவருகின்றன. உதட்டளவில் சமூகநீதி பேசி, தேர்தல் வாக்குகளுக்காக சமூகத்தில் ஜாதிய வேற்றுமையை வளர்த்துக் கொண்டிருக்கும் திமுகவின் செயல்பாடுகளின் விளைவுதான். இது போன்ற கொடூர சம்பவங்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்." என்று அண்ணாமலை கூறியிருந்தார்.
அதற்கு தான் திமுக சார்பில் பதிலடி தற்போது கொடுக்கப்பட்டிருக்கிறது. நாங்குநேரி மாணவரை வெட்டிய மாணவரின் தந்தை பாஜக உறுப்பினர் என்று நெல்லை திமுகவினர் பதிலடி கொடுத்துள்ளனர். திமுகவினர் முன்பைவிட இப்போது அண்ணாமலைக்கு கடும் பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளனர். ஆனால் மாநில தலைமையில் இருந்து வராமல் மாவட்ட அளவில் இருந்தே எதிர்ப்புகளை வெளியிட்டு வருகிறது திமுக. இதுவரை நேரடியாக திமுக தலைமை அண்ணாமலைக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டது இல்லை. பல விஷயங்களில் அண்ணாமலையின் பெயரை கூட குறிப்பிட்டது இல்லை. அதேநேரம் இரண்டாம் கட்ட மற்றும் 3ம் கட்ட தலைவர்களை வைத்தே அண்ணாமலைக்கு திமுக பதிலடி கொடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications