தமிழக அரசு கவிழும் வரை மக்களை திரட்டி போராட்டம்.. ஸ்டாலின் எச்சரிக்கை
தஞ்சாவூர்: தமிழக அரசை கவிழ்க்கும் வரை மக்களை திரட்டி போராட்டம் நடத்திக்கொண்டுதான் இருப்போம் என்று எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தஞ்சையில் திமுக நிர்வாகி அஞ்சகம் பூபதி இல்ல திருமண விழாவில் ஸ்டாலின் பங்கேற்றார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் தற்போது செயல்படாத அரசு உள்ளது. நொடிப்பொழுதில் கூட ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பு உண்டு.
ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் 19 பேர், அரசு மீது நம்பிக்கையில்லை எனக்கூறி ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ள நிலையிலும் மெஜாரிட்டி பலம் இல்லாமல் ஆட்சி தொடருகிறது. முதல்வர் கூட்டத்தில் பெரும்பான்மைக்கு தேவையான எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளவில்லை

நடவடிக்கை இல்லை
தமிழக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி திமுக சார்பிலும், ஆளுநரிடம் கடிதம் அளித்திருந்தோம். மேலும் ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்தோம். ஆனால் ஒரு நடவடிக்கையும் இல்லை.

ஆளுநருக்கு கெடு
வரும் 10ம் தேதி திமுக, காங்கிரஸ் சார்பில் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். அப்போது சட்டசபையை கூட்டுங்கள். மெஜாரிட்டி நிரூபிக்க உத்தரவிடுங்கள் என கோரிக்கை விடுப்போம். அப்போதும் ஆளுநர் இழுபறி செய்தால், இதற்கு குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்வோம்.

போராட்டம் ஓயாது.
அதற்குள் அவர் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், ஆட்சியை கவிழ்க்கும் வகையில் போராடுவோம். ஆட்சியை கவிழ்க்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. சட்ட ரீதியாகவும், மக்களை திரட்டியும் போராடுவோம்.

மக்கள் பணி
மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்பதற்காக திமுக ஆட்சிக்கு வர முயற்சிக்கிறது. இன்று நாடு குட்டிச்சுவராகியுள்ளது. அதிகார பசி எங்களுக்கு இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications