18 எம்எல்ஏக்கள் பதவியுடன் அமைச்சர் பதவியையும் சேர்த்து இழக்கும் நிலையில் எடப்பாடி அரசு!
18 எம்எல்ஏக்கள் பதவி பறிபோனதை தொடர்ந்து எடப்பாடி அரசில் ஒரு அமைச்சர் பதவியும் இழக்கும் நிலையில் ஏற்பட்டுள்ளது.
சென்னை: தினகரன் தரப்பு 18 எம்எல்ஏக்களின் பதவி பறிக்கப்பட்ட நிலையில் எடப்பாடி அரசில் ஒரு அமைச்சரின் பதவியும் பறிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்பதால் அவருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் கடந்த மாதம் தினகரன் தரப்பு 18 எம்எல்ஏக்கள் கடிதம் அளித்தனர்.
இந்நிலையில் அந்த எம்எல்ஏக்கள் கொறடாவின் உத்தரவை மீறியதாக அவர்கள் 18 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

எடப்பாடி கணக்கு
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டால் தன்னிடம் உள்ள 112 (அதிமுக கூட்டணி எம்எல்ஏக்கள் 3 பேர் தவிர்த்து) எம்எல்ஏக்களை கொண்டு எளிதில் வெற்றி பெறலாம் என்று எடப்பாடி கணக்கு போட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினார்.

ஒரு அமைச்சர் பதவி இழப்பு
இந்த தகுதிநீக்க உத்தரவை தொடர்ந்து எடப்பாடி அரசு 18 எம்எல்ஏக்களை இழந்துவிட்டது. இத்துடன் சேர்த்து ஒரு அமைச்சர் பதவியையும் எடப்பாடி அரசு இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

முதல்வருடன் சேர்த்து 33 அமைச்சர்கள்
ஜெ. மறைவால் சட்டசபை பலம் 233 தொகுதிகளாக இருந்தது. அந்த பலத்தில் 15 சதவீதம் அளவுக்குதான் அமைச்சர்கள் எண்ணிக்கை இருக்க வேண்டும் என்பது சட்டம். எனவே தற்போது, 233 தொகுதி அடிப்படையில், 15 சதவீதம் என்ற கணக்கில் முதல்வருடன் சேர்த்து 33 அமைச்சர்கள் எடப்பாடி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

32 அமைச்சர்கள்
ஆனால் 18 பேர் தகுதி நீக்கத்துக்கு பிறகு சட்டசபையில் உறுப்பினர்களின் பலம் 215 ஆகியுள்ளது. இதனால் முதல்வருடன் சேர்த்து 32 அமைச்சர்கள் மட்டுமே இடம்பெற முடியும். இதனால் ஒரு அமைச்சர் பதவி இழக்கும் நிலைக்கு எடப்பாடி அரசு தள்ளப்பட்டுள்ளது. பதவியை இழக்க போகும் அமைச்சர் யார் என்பது இனிதான் தெரியும். எந்த அமைச்சர் பதவியில் கை வைத்தாலும் அது அரசுக்கு எதிராக அவர்களை தூண்டுவதை போல அமைந்துவிடும் என்பதால் எடப்பாடிக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications