இபிஎஸ் அதை செய்து இருக்கக் கூடாது.. அதிமுக ஜெயிக்கணும்னா.. ஓ பன்னீர் செல்வம் பரபர பேட்டி
மயிலாடுதுறை: ஆரம்பத்தில் இருந்து நாங்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.. எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும். கட்சி விதிப்படி சாதாரண தொண்டன் கூட கட்சியின் உச்சபட்ச பதவிக்கு போட்டியிடலாம். ஆனால் அவர்கள் தான் விதியை திருத்தியிருக்கிறார்கள்.. அதை மாற்றக்கூடது என்றுதான் சொல்லி வருகிறோம் என்று மயிலாடுதுறையில் ஓ பன்னீர் செல்வம் பேட்டியளித்துள்ளார்.
அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பல்வேறு அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இணைந்த போது ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமை கோஷம் எழுந்தது. இதனால், மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே பிளவு ஏற்பட்டது.

பொதுக்குழு செல்லும் என அறிவிப்பு
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படார். அதிமுகவில் இருந்து ஓ பன்னீர் செல்வம் நீக்கப்படுவதாகவும் தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது. ஒருங்கிணைப்பாளரான தனது ஒப்புதல் இன்றி கூட்டப்பட்ட இந்த பொதுக்குழு செல்லாது என்று ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என்று அறிவித்தது.

இடையீட்டு மனு தாக்கல்
இதையடுத்து பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போதே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை அதிமுக தலைமை வெளியிட்டது. இதனால், தேர்தல் அறிவிப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.

ஓபிஎஸ் பேட்டி
இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தலாம் எனவும் முடிவுகளை வெளியிடக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. பொதுச்செயலாளர் தேர்தல் மற்றும் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால்
அப்போது அவரிடம் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சியை ஒருங்கிணைத்து அதிமுகவை பலம் வாயந்த கட்சியாக மாற்றுவேன் என்று சொல்லியிருக்கிறாரே என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஓ பன்னீர் செல்வம், " இதில் என்ன இருக்கு... ஆரம்பத்தில் இருந்து நாங்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.. எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும்.

விதியை திருத்தியிருக்கிறார்கள்
நான் எனது நிலைப்பாட்டை மாற்றவில்லை. கட்சி விதிப்படி சாதாரண தொண்டன் கூட கட்சியின் உச்சபட்ச பதவிக்கு போட்டியிடலாம். ஆனால் அவர்கள் (இபிஎஸ் தரப்பு) விதியை மாற்றி 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும்..10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என்று அவர்கள் தான் விதியை திருத்தியிருக்கிறார்கள் அதை மாற்றக்கூடது என்றுதான் சொல்லி வருகிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications