ரூ 2000 வாபஸ்.. என்னாது 2024 இல் இல்லையா? அக்டோபர் 2023 லா? என்ன இப்படி சொல்கிறார் கே.சி.பழனிசாமி?
சென்னை: ரூ 2000 நோட்டுகள் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பதற்கான காரணத்தை முன்னாள் அதிமுக எம்பி கே.சி. பழனிசாமி விளக்கியுள்ளார்.
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக ரிசர்வ் வங்கி கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி முதல் ரூ 500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அப்போது பணபுழக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க புதிய ரூ 500, ரூ 2000, ரூ 200 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. அது போல் 89 சதவீத ரூ 2000 நோட்டுகள் 2016 இல் புழக்கத்தில் விட்டதை அடுத்து 2018-2019 ஆம் ஆண்டு முதல் ரூ 2000 நோட்டுகள் அச்சடிப்பதையும் ஆர்பிஐ நிறுத்திவிட்டது.

இந்த நிலையில் பணமதிப்பிழப்பு பிரச்சினைகள் குறைந்ததாலும் இதர ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் புழக்கத்தில் இருப்பதாலும் ரூ 2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. வரும் 23ம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை பொதுமக்கள் தங்கள் கைவசமுள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் அலுவலகங்கள் அல்லது வங்கிக் கிளைகளில் ஒப்படைத்து, அவரவருக்குரிய வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் என்று ஆர்பிஐ தெரிவித்துளளது.
அதேபோல, 2,000 நோட்டுகளை வேறு மதிப்புகளை கொண்ட பணத் தாள்களாக மாற்றிக் கொள்ளலாம். ஆனால், நடைமுறைச் சிக்கல்களை தவிர்க்கும் விதமாக, வாடிக்கையாளர் ஒருமுறை 20,000 ரூபாய் மதிப்புள்ள 2,000 நோட்டுகளை மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

வங்கிகளில் இன்று முதல் ரூ 2000 விநியோகத்தை நிறுத்துமாறும் ஆர்பிஐ அறிவித்துள்ளது. கிளீன் நோட் பாலிசி என்ற நடைமுறையில் இந்த நோட்டுகள் திரும்ப பெறப்படுகின்றன. அது போல் 2013- 2014-ஆம் ஆண்டும் சில ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டன. ரூ 2000 நோட்டு புழக்கம் கருப்பு பணத்தை அதிகரிக்க வழிவகுக்கும் என அப்போதே விமர்சனம் எழுந்தது.
இந்த நிலையில் இதுகுறித்து முன்னாள் அதிமுக எம்பி கே.சி.பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: வருகிற அக்டோபர்,நவம்பர் மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படுவதற்க்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது எதிர்க்கட்சிகளின் பணபலத்தை கட்டுப்படுத்துவதற்க்கே இந்த Rs 2000 நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பு. அதிக அளவில் Rs 2000 நோட்டுகளை செலுத்துகிறவர்கள் கண்காணிக்கப்பட்டு சோதனை நடத்துவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications