கப்பல்கள் மோதலால் எண்ணெய் கசிவு- திருவொற்றியூர் கடலில் செத்து மிதக்கும் மீன்கள், ஆமைகள்!
திருவொற்றியூர் அருகெ கடலில் திடீரென மீன்கள் மற்றும் ஆமைகள் செத்து மிதக்கின்றன. நேற்று கப்பல்கள் மோதிக்கொண்டதால் கசிந்த எண்ணெய் காரணமா என சந்தேகம் எழுந்துள்ளது.
சென்னை: திருவொற்றியூர் அருகே கடற்பகுதியில் மீன்கள் மற்றும் ஆமைகள் திடீரென செத்து மிதப்பதோடு ஏராளமான மீன்கள் மற்றும் அரியவகை ஆமைகள் கரை ஒதுங்கியுள்ளன. நேற்று கடலில் 2 கப்பல்கள் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட எண்ணெய் கசிவு காரணம் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் காமராஜர் துறைமுகம் உள்ளது. இங்கு, வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் நிலக்கரி, இரும்பு, உணவு பொருட்கள், மருந்து பொருட்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள், பிளாஸ்டிக் டம்ளர் தயாரிக்க பயன்படுத்தப்படும் இயந்திரம் உள்ளிட்ட பல வகையான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது.

இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி, கன்வேயர் பெல்ட் மூலம் வடசென்னை அனல் மின் நிலையத்துக்கும், வல்லூரில் உள்ள தேசிய அனல் மின் நிலையத்துக்கும் மின்சாரம் தயாரிக்க கொண்டு செல்லப்படுகிறது.நேற்று அதிகாலை 4 மணியளவில் ஈராக்கில் இருந்து எம்.டி.பி.டபிள்யூ மாபிள் என்ற கப்பல் எல்பிஜி கேஸ் ஏற்றிகொண்டு சென்னை துறைமுகத்துக்கு வந்தது.
காலியாக சென்ற கப்பல்
பின்னர் லாரிகள் மூலம், இந்த கேஸ் ஏற்றப்பட்டு, அத்திப்பட்டு புதுநகரில் உள்ள ஆயில் கம்பெனிக்கு கொண்டு செல்லப்பட்டது. கேஸ்களை இறக்கிய பின்னர், அந்த கப்பல் காலியாக மீண்டும், ஈராக்குக்கு புறப்பட்டு சென்றது. சுமார் 2 கிமீ தூரத்தில் சென்றபோது, மும்பையில் இருந்து டீசல் மற்றும் பெட்ரோல் ஏற்றிக்கொண்டு எம்.டி.பி. டவுன் என்ற கப்பல், துறைமுகத்துக்கு வந்து கொண்டிருந்தது.
நேருக்கு நேர் மோதி கப்பல்கள்
நடுக்கடலில் ஒரே பாதையில் இரு கப்பல்களும் வந்ததால் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதில் 2 கப்பல்களும் சேதமடைந்ததன. கப்பலில் இருந்த ஆயில் கசிந்து எண்ணூர் மற்றும் திருவொற்றியூர் கடற்கரையில் இருந்து 200 மீட்டர் தூரத்துக்கு மிதந்தது.
செத்து மிதக்கும் மீன்கள்
இதனால் மீன்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதப்பட்டது. இந்த நிலையில், திருவொற்றியூர், எண்ணூர் பகுதியில் மீன்கள், ஆமைகள் செத்து மிதக்கின்றன. கடலில் துர்நாற்றம் வீசுகிறது.
மீன்பிடிக்க முடியாமல் அவதி
இதனால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் இருந்து பைபர் படகு மற்றும் கட்டு மரத்தின் மூலம் விடியற்காலை 3 மணிக்கு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்வது வழக்கம். தற்போது கப்பலில் இருந்து கசிந்த ஆயில் கடற்கரையில் பல நூறு மீட்டர் தூரத்திற்கு மிதப்பதால் அவர்களால் கடலில் மீன் பிடிக்க முடியவில்ைல.
நோய் ஏற்படும் ஆபத்து
கடலில் மிதக்கும் ஆயிலால் கடல்வாழ் உயிரினங்கள் இறக்கும் ஆபத்து ஏறபட்டுள்ளது. மீனவர்களுக்கும் நோய் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications