ஜெயலலிதா வீட்டு சமையல்காரர் மீது கொலைவெறி தாக்குதல்- புகார் கொடுத்தும் பலனில்லை
ஜெயலலிதா வீட்டில் சமையல்காரராக வேலை செய்த 80 வயது முதியவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சென்னை: கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில் ஜெயலலிதா வீட்டில் சமையல்காரராக வேலை செய்த முதியவர் பஞ்சவர்ணம் மீது மர்மநபர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதற்காக இந்த தாக்குதல் நடந்தது என்பது மர்மமாகவே உள்ளது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டில் சிவகங்கையை சார்ந்த கே.பஞ்சவர்ணம், 80. 1991 முதல் 1996ம் ஆண்டு வரை சமையல்காரராக வேலை செய்தார். வயது முதிர்வின் காரணமாக அவர் வேலையை விட்டு நின்று விட்டார். எனினும் அவர் மீது கொண்ட மரியாதையினால்,
இவரது மகன் ப.முருகேசன் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையில் உதவி மக்கள் தொடர்பு துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
தனது மகன் வீட்டில் பஞ்சவர்ணம் வசித்து வந்தார். அவருக்கு 80 வயதாகிறது. பஞ்சவர்ணம் இன்று அதிகாலை நடைபயிற்சி செய்து விட்டு, தனது மகன் முருகேசன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கும் போது, மர்ம கும்பல் அவரை சுற்றி வளைத்தது. பயங்கர ஆயுதங்களுடன் அவரை தாக்கியது.

முதியவர் மீது தாக்குதல்
திடீரென நிகழ்ந்த கொலை தாக்குதலில் பஞ்சவர்ணம் ரத்தம் சொட்ட சொட்ட தடுமாறி விழுந்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்ட அவரது மகன் முருகேசன் தந்தையை காப்பாற்ற முயன்ற போது, அந்த கும்பலைச் சார்ந்த 3 பேர்கள் பிடித்துக் கொண்டனர்.

தீவிர சிகிச்சை
இரண்டு பேர் பஞ்சவர்ணத்தை கொலைவெறியோடு தலையில் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பஞ்சவர்ணத்தை, ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பஞ்சவர்ணத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொலைவெறி தாக்குதல்
பஞ்சவர்ணத்தின் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல்நிலையத்தில் அவரது மகன் முருகேன் புகார் அளித்துள்ளாராம். ஆனால், சைதாபேட்டை காவல்நிலையத்தில் புகார் மனுவை காவலர்கள் ஏற்க மறுத்துவிட்டதாக தெரிகிறது.

தொடரும் கொலைகள்
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் மர்மமாகவே உள்ளது. கொடநாடு காவலாளி கொலை, போயஸ்கார்டன் வீட்டு கார் டிரைவர் விபத்தில் மர்மமரணமடைந்தது என பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

மர்மம் என்ன?
இந்த சூழ்நிலையில் ஜெயலலிதாவின் வீட்டில் தொடர்ந்து 5 ஆண்டுகள் சமையல்காரராக பணியாற்றிய 80 வயது முதியவர் மீது கொலைவெறித் தாக்கல் நடத்திய நபர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மர்மமாக உள்ளது.












Click it and Unblock the Notifications