தமிழக அரசு ரூ 9.75 கோடி உதவி... ஹார்வர்டு பல்கலை.யில் தமிழ் இருக்கை உறுதியானது!
சென்னை: தமிழக அரசு ரூ 9.75 கோடி கொடுத்ததன் மூலம், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழுக்கென தனி இருக்கை அமைவது உறுதியாகியுள்ளது.
உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களுள் ஒன்றான ஹார்வர்டு பல்கலைக் கழகம் அமெரிக்காவில் மாசசூஸெட்ஸ் மாகாணத்தில் உள்ள கேம்பிரிட்ஜ் நகரில் அமைந்துள்ளது. 1636-ல் நிறுவப்பட்ட இந்த பல்கலைக்கழகம் உலகின் பெருமை மிக்க கல்வி நிறுவனமாக உள்ளது.

இந்த பல்கலைக் கழகத்தில் உலகின் மூத்த மொழிகளில் முதன்மையானதாகக் கருதப்படும்
தமிழுக்கென ஒரு இருக்கை (Tamil Chair) அமைய வேண்டும் என அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் முயற்சி மேற்கொண்டனர். ஏற்கெனவே மற்ற மூத்த மொழிகளான கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, பாரசீகம், சமஸ்கிருதம், சீனம் ஆகிய மொழிகளுக்கு இப் பல்கலைக் கழகத்தில் இருக்கைகள் அமைக்கப்பட்டு மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இங்கு தமிழ் இருக்கை அமைக்க அமெரிக்காவில் வாழும் டாக்டர்களான ஜானகிராம், சு.சம்பந்தம் ஆகியோர் ஒரு திட்டத்தை தயாரித்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவதற்கான அனுமதியை பெற்று உள்ளனர்.
தமிழ் இருக்கைக்கென ரூ 33 கோடி செலவாகும் என ஹார்வர்டு பல்கலைக் கழகம் கூறிவிட்டது. இந்தத் தொகையில் ரூ.6 கோடியே 70 லட்சத்தை ஜானகிராமனும் சம்பந்தமும் சொந்த சேமிப்பில் இருந்து வழங்கி உள்ளனர். மீதித் தொகையை உலகத் தமிழர்களிடம் இருந்து நன்கொடையாக திரட்டி வருகின்றனர்.
ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள தமிழ் சங்கங்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி இந்த நிதியினைத் திரட்டி வந்த நிலையில், தமிழக அரசு தன் பங்காக ரூ 9.75 கோடியை இன்று தமிழ் இருக்கைக்காகக் கொடுத்துள்ளது.
இதன் மூலம் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைவது உறுதியாகியுள்ளது. மொத்தம் எவ்வளவு தொகை திரட்டப்பட்டுள்ளது என்பதைக் கணக்கிட்டு, மீதித் தொகையைப் பெற தமிழக அரசே முயற்சிக்கும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் ஆர்வலர்களுக்கு தமிழக அரசின் இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications